ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்து விபத்து
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் 2 மீனவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்.
புதுக்கடை:
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் 2 மீனவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்.
தொடரும் விபத்துகள்
தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுக முகத்துவாரம் பகுதியில் அடிகடி ராட்சத அலையில் படகுகள் சிக்கி விபத்து ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து ஏற்படும் விபத்துகளால் இதுவரை பல மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே துறைமுக கட்டமைப்பை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று காலையில் 2 மீனவர்கள் பைபர் படகில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
படகு கவிழ்ந்தது
அவர்கள் மீன்பிடித்து விட்டு கரை சேருவதற்காக துறைமுகம் முகத்துவார பகுதியில் வந்த போது திடீரென ராட்சத அலை எழுந்து படகின் மீது மோதியது. இதில் படகு நிலைதடுமாறி கவிழ்ந்தது. அதில் இருந்த 2 மீனவர்களும் கடலில் தூக்கி வீசப்பட்டு தண்ணீரில் தத்தளித்தனர். படகில் இருந்த மீன் மற்றும் வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் கடலில் மூழ்கின.
இந்த விபத்தை கரையில் மீன் ஏலம் எடுத்துக்கொண்டிருந்த சில மீனவர்கள் பார்த்தனர். உடனே, அவர்கள் படகில் விரைந்து சென்று கடலில் தத்தளித்த 2 மீனவர்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தது.
மேலும், அவர்களது படகும் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தினால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story