கட்டுமான பொருட்களுடன் சென்ற லாரிகள் சிறைபிடிப்பு
தேங்காப்பட்டணம் துறைமுகம் சீரமைப்பு பணிக்கு கட்டுமான பொருட்களை கொண்டு சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்லங்கோடு:
தேங்காப்பட்டணம் துறைமுகம் சீரமைப்பு பணிக்கு கட்டுமான பொருட்களை கொண்டு சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேங்காப்பட்டணம் துறைமுகம்
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இரையுமன்துறை பகுதியில் அமைந்துள்ள நுழைவு வாயில் பகுதி (முகத்துவாரம்) கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கடல் சீற்றத்தால் சேதமடைந்தது. இதனை சரிசெய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், அதற்கான பணியை தொடங்க தேவையான கட்டுமான பொருட்களை குடியிருப்பு பகுதியில் உள்ள சாலை வழியாக கொண்டு செல்ல முயன்றனர். அப்போது, சாலைேயார வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து துறைமுக பகுதிக்கு பொருட்களை கொண்டு செல்ல முறையான சாலை வசதி இல்லாததால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
இந்தநிலையில் துறைமுக முகத்துவாரத்தில் தொடர்ந்து படகுகள் கவிழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்க உடனடியாக துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று மீதமுள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
மாற்றுசாலை வழியாக...
இந்தநிலையில் கட்டுமான பணியை மீண்டும் தொடங்குவதற்காக கட்டுமான பொருட்களை குடியிருப்பு பகுதியில் உள்ள சாலை வழியாக கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு இரையுமன்துறை கிராம மக்கள் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் கடல் மார்க்கமாக மாற்று சாலை ஏற்படுத்தி கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல முயன்றனர்.
அப்போதும் அந்த சாலை யோரம் அமைந்துள்ள வீட்டில் வசிக்கும் மக்கள் கனரக வாகனங்கள் இந்த பகுதி வழியாக செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு வீடு இடியும் என்று குற்றம்சாட்டி சாலையின் முன்பு மண்ணை கொட்டி தடுப்பு அமைத்து இருந்தனர்.
இந்தநிைலயில் நேற்று காலை சுமார் 10-க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு கடல்மார்க்கமாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுச்சாலை வழியாக செல்ல முயன்றது. ஆனால் சாலை அடைக்கப்பட்டிருந்ததால் செல்ல முடியவில்லை.
சிறைபிடிப்பு
இதனை தொடர்ந்து ஒப்பந்ததாரர் கட்டுமான பொருட்களை ஏற்றிய லாரிகளை போலீசாரின் உதவியுடன் இரையுமன்துறை குடியிருப்பு பகுதி சாலை வழியாக கொண்டு செல்ல முயன்றார். சிறிது தூரம் சென்றதும் ஊர்மக்கள் சாலையின் குறுக்கே கூடி நின்று வாகனங்களை தடுத்து நிறுத்தி சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கிள்ளியூர் தாசில்தார் ஜூலியன் மற்றும் குளச்சல் மீன்வளத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று மீனவமக்கள் மற்றும் பங்குதந்தை முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊர்மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து வழக்கம் போல் செல்லும் தண்ணீர் லாரிகள் மட்டும் குடியிருப்பு பகுதி வழியாக செல்ல அனுமதித்து விட்டு மற்ற வாகனங்களை திருப்பி அனுப்பினர். பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் இரையுமன்துறை கிராமத்திற்குள் செல்லும் அரசு பஸ்கள் நேற்று மதியம் வரை மாற்றுப்பாதையில் சென்றன.
இந்த சம்பவத்தால் இரையுமன்துறை பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story