தனித்தேர்வர்களுக்கு பிளஸ்-2 துணைத்தேர்வு தொடங்கியது


தனித்தேர்வர்களுக்கு பிளஸ்-2 துணைத்தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 7 Aug 2021 2:23 AM IST (Updated: 7 Aug 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

தனித்தேர்வர்களுக்கு பிளஸ்-2 துணைத்தேர்வு தொடங்கி நடந்தது.

பெரம்பலூர்:

பிளஸ்-2 துணைத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கொரோனா காரணமாக மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கான தேர்வு மதிப்பெண் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 மதிப்பெண் செய்முறை, உள்மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டது. தனித்தேர்வர்களாக பிளஸ்-2 துணை தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்தவர்களும், தங்களுக்கும் தேர்வினை ரத்து செய்து தேர்ச்சி மதிப்பெண் வழங்குமாறும், இல்லையென்றால் கொரோனா தொற்று குறைந்த பிறகு தேர்வினை நடத்துமாறும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் தனித்தேர்வர்களுக்கு பிளஸ்-2 தேர்வை தமிழக அரசு ரத்து செய்யவில்லை. மாறாக கொரோனா தொற்று குறைந்ததால் ஆகஸ்டு 6-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தனித்தேர்வர்களுக்கு பிளஸ்-2 தேர்வை நடத்த அரசு உத்தரவிட்டது.
தமிழ் தேர்வு
ஏற்கனவே பிளஸ்-2 துணைத்தேர்வினை எழுத தனித்தேர்வர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் கல்வி மாவட்டத்தில் 129 பேரும், வேப்பூர் கல்வி மாவட்டத்தில் 27 பேரும் என மொத்தம் 156 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வினை எழுத தனித்தேர்வர்கள் மொத்தம் 200 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான தேர்வு நேற்று முதல் தொடங்கியது.
நேற்று தமிழ் தேர்வு நடந்தது. இந்த தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அரியலூர் மான்போர்ட்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தது. காலை 10.15 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1.15 மணிக்கு முடிவடைந்தது.
49 பேர் வரவில்லை
பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 துணைத்தேர்வில் தமிழ் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 75 பேரில், 57 பேர் தேர்வு எழுதினர். 18 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் தமிழ் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 100 பேரில், 69 பேர் தேர்வு எழுதினர். 31 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு தேர்வுத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்ராஜன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன் ஆகியோர் பார்வையிட்டனர். அரியலூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி ராமன் பார்வையிட்டார். ஆங்கில தேர்வு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது.

Next Story