வெளிநாட்டு மரங்களை முழுமையாக தடை செய்ய நடவடிக்கை நாமக்கல்லில் அமைச்சர் மெய்யநாதன் பேட்டி


வெளிநாட்டு மரங்களை முழுமையாக தடை செய்ய நடவடிக்கை நாமக்கல்லில் அமைச்சர் மெய்யநாதன் பேட்டி
x
தினத்தந்தி 7 Aug 2021 2:31 AM IST (Updated: 7 Aug 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டு மரங்களை முழுமையாக தடை செய்ய நடவடிக்கை நாமக்கல்லில் அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

நாமக்கல்:
வெளிநாட்டு மரங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
ஆலோசனை கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சேலம் மண்டல இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் மதிவாணன் வரவேற்றார். கூட்டத்திற்கு தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமை தாங்கினார். சுற்றுலா துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்து கொண்டு பேசினார்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த கருத்துக்களை தெரிவித்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்‌.என்.ராஜேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள், கோழிப்பண்ணையாளர்கள், சாயப்பட்டறை உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு அமைச்சர் மெய்யநாதன் கலந்துரையாடினார்.
வெளிநாட்டு மரங்களுக்கு தடை
இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:- தமிழகத்தில் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு தொடர்ந்து கண்காணித்து வளர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது. விரைவில் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கும். 3 அல்லது 4 ஆண்டுகளில் வேம்பு, புங்கன், அரசம், பூவரசம் போன்ற நாட்டு மரங்களையும், மனிதனுக்கு பலன் தரக்கூடிய மரங்களையும் நடவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. 
அதன் மூலம் பூமியின் சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படும். வெளிநாட்டு மரங்களை முழுமையாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சாயப்பட்டறை கழிவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வாக சாயப்பட்டறை உரிமையாளர்கள் 3 திட்டங்களை ஆய்வுக்கு கொடுத்து உள்ளனர். அதை பரிசீலித்து எந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த முடியுமோ, அதற்கு ஒன்றிய அரசிடம் நிதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாநில அரசு நிதியை ஒதுக்கி பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்த நடவடிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது.
சுத்தமான காற்று
சாயக்கழிவில் இருந்து நிராகரிக்கப்பட்ட உப்புக்கு இந்திய அளவில் தீர்வு காணப்படவில்லை. குறிப்பாக நாமக்கல், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 2 லட்சம் டன் நிராகரிக்கப்பட்ட உப்புக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலை மூலம் 9 லட்சம் டன் நிராகரிக்கப்பட்ட உப்பு உள்ளது. சுற்றுச்சூழல் வல்லுனர்கள் மற்றும் ஐ.ஐ.டி. மாணவர்களை உள்ளடக்கிய குழு மூலம் அவற்றுக்கு தீர்வு காண முதல் கட்ட முயற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். 
கோழிப்பண்ணைகளுக்கு அருகே வசிக்கும் மக்கள் துர்நாற்றம் இல்லாத சுத்தமான காற்றை சுவாசிக்கும் வகையில் மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கோழிப்பண்ணை தொழில் மற்றும் மக்கள் பாதிக்காத வகையில் அரசின் நடவடிக்கை இருக்கும். கடந்த 8 ஆண்டில் ரூ.900 கோடி மதிப்பில் 5½ கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சம் மரங்கள் கூட வளரவில்லை. பெயரளவில் அந்த திட்டம் இருந்தது வருத்தமளிக்கிறது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Next Story