கோலார் தங்கவயல் போலீஸ் மாவட்டம் ரத்து செய்யப்படாது; கர்நாடக தலைமை செயலாளர் ரவிக்குமார் உறுதி


கோலார் தங்கவயல் போலீஸ் மாவட்டம் ரத்து செய்யப்படாது; கர்நாடக தலைமை செயலாளர் ரவிக்குமார் உறுதி
x
தினத்தந்தி 7 Aug 2021 3:14 AM IST (Updated: 7 Aug 2021 3:14 AM IST)
t-max-icont-min-icon

கோலார் தங்கவயல் போலீஸ் மாவட்டம் ரத்து செய்யப்படாது என்று கர்நாடக தலைமை செயலாளர் ரவிக்குமார் உறுதிபட தெரிவித்துள்ளார்.

கோலார்: கோலார் தங்கவயல் போலீஸ் மாவட்டம் ரத்து செய்யப்படாது என்று கர்நாடக தலைமை செயலாளர் ரவிக்குமார் உறுதிபட தெரிவித்துள்ளார். 

கோலார் தங்கவயல் போலீஸ் மாவட்டம்

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் சிறப்பு அந்தஸ்துடன் தனி போலீஸ் மாவட்டமாக செயல்பட்டு வந்தது. அதாவது கோலார் தங்கவயலுக்கு என்று தனி போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் கோலார் தங்கவயல் போலீஸ் மாவட்டத்தை ரத்து செய்யப்போவதாக தகவல்கள் பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் கோலார் தங்கவயல் போலீஸ் மாவட்டத்தை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து இன்று(சனிக்கிழமை) கோலார் தங்கவயல் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அனைத்துக்கட்சியினர் அறிவித்து உள்ளனர். 

இந்த நிலையில் நேற்று அனைத்து கட்சி தலைவர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் கோலார் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 

தலைமை செயலாளரிடம் மனு

போராட்டம் நடத்துவது அவரவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால், இந்த முழு அடைப்பு போராாட்டத்தை அனைவரும் அமைதியான முறையில் நடத்தவேண்டும். எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க அனைவரும் முன்வரவேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் நேற்று ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. கர்நாடக மாநில தலைமை செயலாளர் ரவிக்குமாரை நேரில் சந்தித்து கோலார் தங்கவயல் போலீஸ் மாவட்டத்தை ரத்து செய்யக்கூடாது எனக்கோரி மனு கொடுத்தார். 

ரத்து செய்யும் எண்ணம்...

மனுவை பெற்றுக்கொண்ட தலைமை செயலாளர் ரவிக்குமார் “கோலார் தங்கவயல் போலீஸ் மாவட்டத்தை ரத்து செய்யும் எண்ணம் அரசிடம் இல்லை. ஒரு வேளை அவ்வாறு எண்ணம் தோன்றினால் அதுபற்றி உங்களது கவனத்திற்கு தெரிவிக்கப்படும்’’ என்று கூறி உறுதி அளித்தார். இதன்மூலம் கோலார் தங்கவயல் போலீஸ் மாவட்டம் ரத்து செய்யப்படாது என்பது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Next Story