பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கியது


பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கியது
x
தினத்தந்தி 7 Aug 2021 3:14 AM IST (Updated: 7 Aug 2021 3:14 AM IST)
t-max-icont-min-icon

சிந்தாமணி தாலுகாவில், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த இரும்பு கூண்டில் சிக்கியது.

சிக்பள்ளாப்பூர்: சிந்தாமணி தாலுகாவில், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த இரும்பு கூண்டில் சிக்கியது. 

பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா கைவாரா மற்றும் கொங்கனஹள்ளி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிறுத்தை ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்தது. மேலும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது. இதனால், பொதுமக்கள் பீதியில் இருந்தனர். சிறுத்தையை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு  வேண்டுகோள் விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற வனத்துறை அதிகாரிகள் 2 நாட்களுக்கு முன்பு கொங்கனஹள்ளி மலைப்பகுதியில் கூண்டு வைத்து அதில் ஒரு நாயை கட்டிவைத்தனர். 

இந்த நிலையில் நேற்று காலையில் அங்கு வந்த சிறுத்தை, நாயை வேட்டையாட முயன்று வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிக் கொண்டது. 

வனப்பகுதியில் விடுவித்தனர்

இதைப்பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் இதுபற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் இரும்பு கூண்டுடன் சிறுத்தையை மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் சிறுத்தையை விடுவித்தனர். அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை சிக்கிக் கொண்டதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 

Next Story