45 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கான பிளஸ்-2 வகுப்பு துணைத்தேர்வு தொடங்கியது


45 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கான பிளஸ்-2 வகுப்பு துணைத்தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 7 Aug 2021 12:09 AM GMT (Updated: 7 Aug 2021 12:09 AM GMT)

தமிழகம் முழுவதும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மையங்களில் 45 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கான பிளஸ்-2 துணைத்தேர்வு நேற்று தொடங்கியது.

சென்னை,

பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், பள்ளி மாணவர்களாக தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.

தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள் முடிவடைந்து, அவர்களுக்கான மதிப்பெண்களும் வழங்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் அரசு வழங்கிய மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் தனியாக நடத்தப்படும் தேர்வில் பங்கேற்று அதில் வரும் மதிப்பெண்களை பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் அரசு வழங்கிய மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்களுக்கும், தனித்தேர்வர்களாக விண்ணப்பித்தவர்களுக்கும் பிளஸ்-2 துணைத்தேர்வு நடத்தப்படுவதற்கான அறிவிப்பை அரசு தேர்வுத்துறை வெளியிட்டது.

இதன்படி, கூடுதல் மதிப்பெண்ணுக்காக தேர்வு எழுத விண்ணப்பித்த 23 மாணவர்கள் உள்பட தனித்தேர்வர்கள் 45 ஆயிரம் பேருக்கு இந்த தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்த நிலையில், அவர்களுக்கான தேர்வு நேற்று தொடங்கியது.

கொரோனா நோய்த் தொற்றை கருத்தில் கொண்டு, மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியோடு தேர்வு எழுதுவதை உறுதி செய்யும் வகையில், தமிழகம் முழுவதும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மையங்களில் இந்த தேர்வு நடந்ததாக கூறப்படுகிறது.

சென்னையை பொறுத்தவரையில், 14 மையங்களில் சுமார் 1,400 மாணவ-மாணவிகள் நேற்று தேர்வு எழுதினார்கள். சென்னை மயிலாப்பூரில் தேர்வு மையமாக அமைக்கப்பட்டு இருந்த ஒரு பள்ளியில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா பார்வையிட்டார்.

தேர்வு எழுத வந்திருந்த மாணவ-மாணவிகள் தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பாக கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், தேர்வு வளாகத்தில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் அதிகாரிகள் அவர்களுக்கு எடுத்து கூறினர். முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடந்தது. இதன் தொடர்ச்சியாக 9, 11, 13, 16, 18 மற்றும் 19-ந் தேதிகளில் தேர்வு நடக்க இருக்கிறது.

Next Story