முக கவசத்தை கழற்ற சொன்ன ஓசூர் பெண்ணிடம் செல்போனில் பேசிய மு.க.ஸ்டாலின்
முக கவசத்தை கழற்ற சொன்ன பெண்ணிடம் செல்போனில் தொடர்பு கொண்டு மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அந்த பெண்ணின் மகள் பள்ளியை திறக்க வேண்டும் என கூறிய கோரிக்கையை கனிவுடன் கேட்டார்.
ஓசூர்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் காரில் ஓசூர் சென்று கொண்டிருந்தார். ஓசூர் உழவர் சந்தை அருகில் ரம்யா என்ற பெண் மு.க.ஸ்டாலினிடம் ‘முக கவசத்தை கழற்றுங்கள் சார், உங்கள் முகத்தை பார்க்க வேண்டும்’ என்று கூறினார்.
மு.க.ஸ்டாலினும் முக கவசத்தை கழற்றியதுடன், அந்த பெண் கொடுத்த ஒரு பேப்பரையும் வாங்கிக்கொண்டார். அந்த பேப்பரில் மு.க.ஸ்டாலினை வாழ்த்திய வாசகங்கள் மற்றும் அந்த பெண்ணின் செல்போன் எண் இருந்தது. அதன்பிறகு மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டு சென்றார்.
நேற்று முன்தினம் இரவு முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அவரது உதவியாளர்கள், அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டனர். முதல்-அமைச்சர் உங்களிடம் பேச உள்ளார் என்று கூறினர். உடனே மகிழ்ச்சியில் திளைத்த ரம்யா, முதல்-அமைச்சருடன் பேச தயாரானார். அவருடைய மகள் விஷ்மயா ஹரிணியும் தயாரானார். இருவரும் மு.க.ஸ்டாலினிடம் செல்போனில் பேசினர்.
அப்போது நடந்த உரையாடல் விவரம் வருமாறு:-.
ரம்யா:- வணக்கம் சார். நீங்கள் சாலை வசதியும், தண்ணீர் வசதியும் முழுமையாக செய்து கொடுத்தால் தமிழ்நாடு எங்கேயோ போய் விடும். நீங்கள் மக்களின் முதல்வராக இருக்கிறீர்கள். இவ்வளவு எளிமையாக உங்களிடம் பேச முடியும் என நான் நினைக்கவே இல்லை சார். ஆட்சி மிகவும் நன்றாக உள்ளது. இந்த ஆட்சி தொடர வேண்டும். நீங்கள் நீண்ட காலம் முதல்-அமைச்சராக இருக்க வேண்டும். வாழ்த்துகள் சார். எனது தந்தையிடம் நீங்கள் பேச முடியுமா?
மு.க.ஸ்டாலின்:- நன்றி. உங்கள் தந்தை அருகில் இருக்கிறாரா?
ரம்யா:- இல்லை சார். அவர் ஊரில் இருக்கிறார். கான்பரன்ஸ் போடலாமா.
மு.க.ஸ்டாலின்:- அவர் வந்ததும் எனக்கு போன் செய்து கொடுங்கள்.
ரம்யா:- ரொம்ப நன்றி சார். சூப்பரா இருக்கீங்க சார். எவ்வளவு வயதானாலும் நீங்கள் அழகாக, ஸ்டைலாக இருக்கிறீர்கள்.
மு.க.ஸ்டாலின்:- நன்றி.
ரம்யா:- எனது மகள் உங்களிடம் பேச விரும்புகிறாள் சார்.
மு.க.ஸ்டாலின்:- கொடுங்கள்.
மாணவி விஷ்மயா ஹரிணி: சார் நல்லா இருக்கிறீர்களா. பிளஸ்-2 படிக்கிறேன் சார். ஸ்கூல் சீக்கிரமாக ஓப்பன் செய்யுங்கள் சார்.
மு.க.ஸ்டாலின்:- ஆன்லைனில் படிக்கிறீர்களா?
மாணவி:- ஆமாம் சார். 2 வருடமாக ஆன்லைனில் தான் படித்துக்கொண்டிருக்கிறேன். வீட்டுக்குள்ளேயே இருக்க முடியவில்லை. ஆன்லைனில் சரியாக படிக்க முடியவில்லை. சீக்கிரமாக பள்ளியை ஓபன் செய்யுங்கள் சார்.
மு.க.ஸ்டாலின்:- கொரோனா பிரச்சினை குறையட்டும். அதன் பிறகு பள்ளிகளை திறக்கலாம்.
இவ்வாறு உரையாடல் நடந்தது.
மு.க.ஸ்டாலின், ஓசூர் பெண் ரம்யா, அவருடைய மகளிடம் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story