மெட்ரோ ரெயிலில் வேலை வாங்கி தருவதாக ரூ.21 லட்சம் மோசடி கல்லூரி விரிவுரையாளர் கைது
திருவள்ளூரை அருகே மெட்ரோ ரெயிலில் மேற்பார்வையாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்த கல்லூரி விரிவுரையாளர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 33). இவர் சென்னை மெட்ரோ ரெயிலில் வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். இதுபற்றி அறிந்த திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, பள்ளிக்கூட தெருவை சேர்ந்த சென்னை கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வரும் கிருபா (42) என்பவர் சந்திரசேகரை நாடியுள்ளார். அவர், எம்.ஏ.,எம்.பில் படித்த பட்டதாரியான தான் தற்போது கல்வித்துறையில் அரசு அதிகாரியாக பெரிய பொறுப்பில் இருப்பதாக கூறி தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.
மேலும் கிருபா மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனில் பணிபுரியும் பெரிய அதிகாரிகளை தனக்கு தெரியும் என்றும், எனவே அவர்கள் மூலமாக சென்னை மெட்ரோ ரெயிலில் மேற்பார்வையாளர் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியதாகவும் தெரிகிறது.
மேலும் வேலை கிடைக்க வேண்டுமானால் ரூ.21 லட்சம் தனக்கு தரவேண்டும் என சந்திரசேகரிடம், கிருபா கேட்டு உள்ளார். இதை உண்மை என்று நம்பிய சந்திரசேகர் ரூ.21 லட்சத்தை அவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு கொடுத்தார்.
அந்த பணத்தை பெற்றுக்கொண்ட அவர், தான் கூறியதுபோல் வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. ஒருகட்டத்தில் கிருபாவுக்கு வேலை வாங்கித் தராமலும், அவர் கொடுத்த பணத்தையும் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.
இதனால் பாதிக்கப்பட்ட சந்திரசேகர் வேலை வாங்கி தருவதாக கூறி தன்னை மோசடி செய்து தலைமறைவாக உள்ள கிருபா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமாரிடம் புகார் அளித்தார்.
அவரது உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில், இன்ஸ்பெக்டர் லில்லி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சூரியகுமார், ஜான் ராயப்பன், வாசுதேவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை அருகே பதுங்கியிருந்த கல்லூரி விரிவுரையாளர் கிருபாவை போலீசார் கைது செய்து பின்னர் ஊத்துக்கோட்டை அழைத்து வந்தனர். அதைத்தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story