தொழிற்பயிற்சி நிலைய முதல்வரின் கணவர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை


தொழிற்பயிற்சி நிலைய முதல்வரின் கணவர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
x
தினத்தந்தி 7 Aug 2021 7:26 PM IST (Updated: 7 Aug 2021 7:26 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் சாவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தனியார் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரின் கணவர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

தேனி:

தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்

தேனி என்.ஆர்.டி. நகரை சேர்ந்தவர் ஆபிரகாம் (வயது 54). அவருடைய மனைவி செந்தாமரை (வயது 50). இவர் தேனியில் உள்ள ஒரு தனியார் பெண்கள் தொழிற்பயிற்சி நிலைய முதல்வராக உள்ளார். 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரகாம் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து, தனது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் கடந்த மாதம் 26-ந்தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆபிரகாம் உயிரிழந்தார். அவர் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த போதே உயிரிழந்து விட்டதாக அவருடைய குடும்பத்தினர் செந்தாமரைக்கு தகவல் கொடுத்தனர். 
பின்னர் அவருடைய உடல் தேனிக்கு கொண்டு வரப்பட்டது.

 இறுதிச்சடங்குகள் முடிந்து, தேனி அருகே கோட்டைப்பட்டியில் உள்ள கல்லறை தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

உடல் தோண்டி எடுப்பு

இந்நிலையில், தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தேனி போலீஸ் நிலையத்தில் செந்தாமரை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. 

பின்னர் அழுகிய நிலையில் இருந்த உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையின் போது உடலில் சில பாகங்கள் சேகரிக்கப்பட்டு ரசாயன பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 பரிசோதனை முடிவு வந்த பிறகு தான், அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
----------------

Next Story