ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு கூடுதலாக 19 வாக்குச்சாவடிகள்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு கூடுதலாக 19 வாக்குச்சாவடிகள்
x
தினத்தந்தி 7 Aug 2021 8:49 PM IST (Updated: 7 Aug 2021 8:49 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக கடந்த தேர்தலைவிட 199 வாக்குச்சாவடிகள் அதிகரிக்க பரிரைக்கப்பட்டுள்ளது. இறுதி பட்டியல் 11-ந் தேதி வெளியிடப்படும் என கருத்து கேட்பு கூட்டத்தில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கூறினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக கடந்த தேர்தலைவிட 199 வாக்குச்சாவடிகள் அதிகரிக்க பரிரைக்கப்பட்டுள்ளது. இறுதி பட்டியல் 11-ந் தேதி வெளியிடப்படும் என கருத்து கேட்பு கூட்டத்தில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கூறினார்.

கருத்து கேட்பு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021-க்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுடனான கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். 

இதில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், நேர்முக உதவியாளர் பாபு மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர் கூறியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 68 ஆயிரத்து 178 வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 13 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 127 ஒன்றிய வார்டுகள், 288 கிராம ஊராட்சிகள், 2220 கிராம வார்டு ஊராட்சிகள் உள்ளன.

19 வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு

தற்போது வெளியிடப்பட்ட வரைவு பட்டியல்படி மொத்தம் 1,410 வாக்குச்சாவடிகள் உள்ளன. அரக்கோணம் ஒன்றியத்தில் 8 வாக்குச்சாவடிகள், ஆற்காடு ஒன்றியத்தில் ஒரு வாக்குச் சாவடி, காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 2 வாக்குச்சாவடிகள், சோளிங்கர் ஒன்றியத்தில் 3 வாக்குச்சாவடிகள், நெமிலி ஒன்றியத்தில் 2 வாக்குசாவடிகள், வாலாஜா ஒன்றியத்தில் 3 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 19 வாக்குச்சாவடிகள் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் ஆண், பெண் வாக்குச்சாவடிகளாக தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒற்றை வார்டு வாக்குச்சாவடி மையங்கள் மொத்தம் 579 ஆகும். தற்போது வெளியிட்டுள்ள வரைவு வாக்குச்சாவடி பட்டியலில் இரட்டை வார்டு வாக்குச்சாவடி மையங்கள் மொத்தம் 831 ஆகும். 

11-ந் தேதி வெளியீடு

இந்தப் பட்டியல் மீதான தங்களுடைய கருத்துக்கள் மற்றும் ஆட்சேபணைகளை தெரிவித்தாள் அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது குறித்து ஆட்சேபனைகள் இருந்தால் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம். இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வருகிற 11-ஆம் தேதி வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் வாக்காளர் பட்டியலில் இரண்டு இடங்களில் பெயர் உள்ளதை நீக்கவும், இறந்தவர்கள் பெயர்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த வாக்குச்சாவடி பட்டியல் நகலை அனைத்து அரசியல் கட்சியினருக்கும் வழங்கிட வேண்டும் என கருத்துக்கள் தெரிவித்தனர்.

Next Story