மடத்துக்குளம் வட்டாரத்தில் நெல் கொள்முதல் மையங்கள் அமைப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம்


மடத்துக்குளம் வட்டாரத்தில் நெல் கொள்முதல் மையங்கள் அமைப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம்
x
தினத்தந்தி 7 Aug 2021 9:47 PM IST (Updated: 7 Aug 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் வட்டாரத்தில் நெல் கொள்முதல் மையங்கள் அமைப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம்

போடிப்பட்டி:
மடத்துக்குளம் வட்டாரத்தில் நெல் கொள்முதல் மையங்கள் அமைப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கூட்ட அரங்கில் நடைபெற்றது.
நெல் சாகுபடி
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமராவதி அணையை அடிப்படையாகக்கொண்டு நெல் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கணியூர், கடத்தூர், காரத்தொழுவு, சோழமாதேவி, குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிப்புதூர் ஆகிய கிராமங்களில் தற்போது சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் குறைந்த வயதுடைய ஏடிடி (ஆர்) 45,கோ 51,கோ (ஆர்) 50,ஏஎஸ்டி 16,ஏடிடி 37 ஆகிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 
குறைந்த வயதுடைய நெல் ரகங்களான இவை அக்டோபர் முதல் வாரத்திலிருந்து அறுவடை செய்யப்படவுள்ளது. கடந்த காலங்களில் இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகள் ஆதிக்கத்தால் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கு போதிய விலை கிடைக்காத நிலை நீடித்து வந்தது. இதனையடுத்து கடந்த பருவங்களில் மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைத்து நிர்ணயிக்கப்பட்ட ஆதார விலைக்கு கொள்முதல் செய்தது.இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளித்தது.
டோக்கன்
அதேநேரத்தில் ருத்ராபாளையம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் எளிதில் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யும் வகையில் அதே பகுதியில் நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன் தலைமையில் நெல் கொள்முதல் நிலையம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரான வேளாண்மை துணை இயக்குனர் மகாதேவன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக உதவி மேலாளர் கார்த்திகேயன், கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளின் ஆலோசனைகளை கேட்டறிந்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் 2 கிராமங்களுக்கு ஒரு நெல் கொள்முதல் மையம் மற்றும் போதுமான இடங்களில் உலர்களங்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும் விவசாயிகள் தங்கள் நெல்லை கொள்முதல் நிலையங்களில் வழங்குவதில் உள்ள இடையூறுகளையும் சுட்டிக்காட்டினர். இதனையடுத்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடை செய்யத் திட்டமிட்ட தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே டோக்கன் பெற்றுக் கொண்டு எந்தவித இடையூறும் இல்லாமல் நெல் கொள்முதல் மையத்தில் அளித்திட ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
முடிவில் மடத்துக்குளம் வட்டார துணை வேளாண்மை அலுவலர் நன்றி கூறினார்.

Next Story