கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி கண்காட்சி


கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி கண்காட்சி
x
தினத்தந்தி 7 Aug 2021 10:04 PM IST (Updated: 7 Aug 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி கண்காட்சி

திருப்பூர்:
இந்திய அரசால் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி தேசிய கைத்தறி தினமாக அறிவிக்கப்பட்டு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் 7-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. வேட்டி,சட்டை அணிந்து வந்த கலெக்டர் வினீத் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்டு மென்பட்டு சேலைகள், கோரோ காட்டன் சேலைகள், கோரோ சேலைகள், காட்டன் சேலைகள், பெட்ஷீட்கள், துண்டு வகைகள், மிதியடிகள் மற்றும் பட்டு அங்கவஸ்திரங்கள் ரூ.25 லட்சம் மதிப்பில் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் 25-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன. இந்த கண்காட்சி நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் கடன் உதவியும், கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.2 லட்சத்து 47ஆயிரம் மதிப்பில் திட்ட தொகையும் கலெக்டர் வழங்கினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், திருப்பூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் மணிமுத்து உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story