தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து


தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து
x
தினத்தந்தி 7 Aug 2021 10:38 PM IST (Updated: 7 Aug 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி கோரம்பள்ளம் தொழிற்பேட்டை வளாகத்திலுள்ள ஒரு தொழிற்சாலையில் பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை தரம் பிரித்து அவற்றை மறு உபயோகப்படுத்துவதற்கு அனுப்புவதற்கான தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. குஜராத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் இந்த தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பணிக்கு வந்த தொழிலாளர்கள் பழைய பாட்டில்களை தரம் பிரித்து அவற்றை அரைத்திடும் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது சுமார் 9 மணி அளவில் தொழிற்சாலையின் பின்பகுதியில் உள்ள காலி இடத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த பழைய பிளாஸ்டிக் கழிவுகளில் திடீரென தீ பிடித்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் தீ மளமளவென தொழிற்சாலையின் உள்பகுதிக்கும் பரவியது. இதனைக்கண்ட தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பிளாஸ்டிக் கழிவுகளில் பிடித்த தீ கரும்புகையாக வெளியேறியது. உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு படையினர் நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மிகுந்த போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 
இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

Next Story