பண்ருட்டி அருகே ஒருதலையாக காதலித்த வாலிபர் கொடுத்த விஷத்தை குடித்த சிறுமி சாவு திருமணத்துக்கு வற்புறுத்தியதால் விபரீத முடிவு


பண்ருட்டி அருகே ஒருதலையாக காதலித்த வாலிபர் கொடுத்த விஷத்தை குடித்த சிறுமி சாவு திருமணத்துக்கு வற்புறுத்தியதால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 7 Aug 2021 11:08 PM IST (Updated: 7 Aug 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே ஒருதலையாக காதலித்த வாலிபர் கொடுத்த விஷத்தை வாங்கி குடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.


புதுப்பேட்டை, 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள சின்னப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் பாண்டியன் (வயது 19). கூலி தொழிலாளி. 

இவர் அந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை பின் தொடர்ந்து சென்று, அவரை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிவந்துள்ளார். ஆனால் அந்த சிறுமி மறுப்பு தெரிவித்து வந்தார்.

 ஒருதலைகாதலில் இருந்த பாண்டியன் அந்த சிறுமியை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

போக்சோவில் கைது

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி, பாண்டியன் மீது பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டியனை கைது செய்தனர். 
இந்த நிலையில் தற்போது பாண்டியன் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார். 

விஷத்தை வாங்கி குடித்தார்

கடந்த 2-ந் தேதி மீண்டும் அதே சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார். இல்லையெனில் விஷம் குடித்து இறந்து போ என விஷத்தை அவரிடம் கொடுத்ததாக தெரிகிறது.

இதில், விரக்தியடைந்த அந்த சிறுமி, சற்றும் எதிர்பாராத விதமாக அந்த விஷத்தை வாங்கி குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


 அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி  நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.  இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து , பாண்டியனை கைது செய்தனர்.

Next Story