கயிற்றால் கழுத்தை இறுக்கி பெண் கொலை
அணைக்கட்டு அருகே கொடுக்கல்-வாங்கல் தகராறில் பெண்ணை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார்.
அணைக்கட்டு
அணைக்கட்டு அருகே கொடுக்கல்-வாங்கல் தகராறில் பெண்ணை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார்.
குடும்பம்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஏரிப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவருக்கு 4 மகள்கள். இவர்களில் சுதா (வயது 38) என்ற மகளை வேலூரை அடுத்த அமிர்தி பகுதியில் உள்ள வெலாங்காட்டில் சேட்டு என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
சுதா திருமணமான ஒரே மாதத்தில் கணவனை சொந்த ஊரான ஏரிப்புதூருக்கே அழைத்து வந்து தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்துவந்தார். இவர்களுக்கு வசந்தகுமார் (17) என்ற மகனும், நேத்ரா (15) என்ற மகளும் உள்ளனர்.
இனிப்பு கடை மாஸ்டர்
சேட்டு, குடும்பத்தை காப்பாற்ற சென்னை வியாசர்பாடியில் உள்ள ஒரு இனிப்புக் கடையில் மாஸ்டராக 25 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். மாதம் ஒரு முறையோ இரண்டு முறையோ தன் மனைவி பிள்ளைகளை பார்ப்பதற்காக வருவார்.
சுதா தன் நிலத்தில் விவசாயம் செய்ததோடு பக்கத்து நிலத்துக்காரரான அதே பகுதியைச் சேர்ந்த ஏரிப்புதூர் யாதவர் தெருவை சேர்ந்த முனுசாமி மகன் சின்னப்பன் (60) என்பவரிடம் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
சின்னப்பனிடம் சுதா அடிக்கடி குடும்ப செலவிற்காக பணம் வாங்கி வந்துள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு சின்னப்பனுக்கு பணம் தேவைப்பட்டதால் சுதா வீட்டிற்குச் சென்று ரூ. 15ஆயிரம் கேட்டுள்ளார்.
சத்தம் போட வேண்டாம்
அப்போது வீட்டிலிருந்த சுதாவின் தங்கை வித்யா, பணத்தை சீக்கிரம் கொடுத்துவிடுகிறோம். வீட்டருகே வந்து சத்தம் போட வேண்டாம் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சுதா தன் நிலத்தில் பசு மாடுகளை மேய்த்துவிட்டு திரும்பினார். பின்னர் பால் கறந்து மகன் வசந்தகுமாரிடம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார். பின்னர் கால்நடைகளை மாட்டு கொட்டகையில் கட்டுவதற்கு சென்றார்.
பாலை வீட்டுக்கு வசந்தகுமார் கொண்டு சென்ற நிலையில் வெகுநேரம் ஆகியும் சுதா வீடு திரும்பவில்லை. இதனால் இரவு 7.30 மணியளவில் வசந்தகுமாரும் சித்தி வித்யாவும் சுதாவை தேடி நிலத்திற்குச் சென்றனர்.
எங்கு தேடியும் சுதாவை காணவில்லை.
பக்கத்து நிலத்துக்காரரான செந்தில் மற்றும் பரதன் ஆகியோரிடம் விசாரித்தபோது, சுதாவும், விவசாயி சின்னப்பனும் கிணற்றருகே சண்டை போட்டுக்கொண்டு இருந்ததாகவும் சிறிது நேரத்திற்கு பிறகு சின்னப்பன் மட்டும் மோட்டார் சைக்கிளில் சென்றதாகவும் கூறினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தகுமாரும் வித்யாவும் கிணற்று கரையோரம் தேடிக்கொண்டிருக்கும் போது நைலான் கயிறு ஒன்று கிணற்றில் தொங்கிக்கொண்டிருந்தது அந்தக் கயிற்றை பிடித்து இழுக்கும்போது கழுத்தில் சுருக்கிட்டு இருந்தவாறு சுதா தண்ணீரிலிருந்து பிணமாக மேலே வந்தார்.
போலீசில் புகார்
தன் தாயைப் பிணமாக பார்த்த வசந்தகுமார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வித்யா அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் இரவு 8 மணிக்கு மேல் சம்பவ இடத்துக்குச் சென்று சுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து விசாரணை செய்ததில் சுதாவிடம் சின்னப்பன் பணம் கேட்டு தராததால் ஆத்திரமடைந்த சின்னப்பன் கிணற்றில் இருந்த நைலான் கயிற்றால் சுதாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் உடலை அதே கயிற்றில் கட்டி கிணற்று தண்ணீரில் வீசி விட்டது தெரிய வந்தது.
சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் வேலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பட்ஜான் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார். மேலும் சின்னப்பனுடன் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என விசாரணை மேற்கொண்டார்.
இதற்கிடையே துரிதமாக செயல்பட்ட அணைக்கட்டு போலீசார் நள்ளிரவு ஒரு மணிக்கு சின்னப்பனை பிடித்தனர்.
வாக்குமூலம்
அவரிடம் விசாரணை நடத்திய போது சுதாவை கொலை செய்து கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் சின்னப்பன் கூறியதாவது:-
சுதா என் நிலத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கு தேவையான கூலியை கொடுத்து வந்தேன். குடும்ப கஷ்டத்திற்காக அவர் கேட்கும் போதெல்லாம் நிறைய பணம் கொடுத்துள்ளேன்.
எனக்கு 15 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. எனவே ரூ.15 ஆயிரத்தை மட்டும் தருமாறு சுதாவிடம் கேட்டேன். எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் பணம் தரவில்லை.
கயிற்றால் இறுக்கி...
இதனால் ஆத்திரமடைந்த நான் வெள்ளிக்கிழமை இரவு சுதாவை கழுத்தில் நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்து விட்டு கிணற்று தண்ணீரில் வீசி விட்டு தப்பித்து விட்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சின்னப்பன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கொடுக்கல்-வாங்கல் தகராறில் பெண்ணை கொன்று கிணற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story