திண்டுக்கல்லில் பயங்கரம் தொழில் அதிபர் சரமாரி வெட்டிக்கொலை கடைக்குள் புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்


திண்டுக்கல்லில் பயங்கரம் தொழில் அதிபர் சரமாரி வெட்டிக்கொலை கடைக்குள் புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 8 Aug 2021 12:59 AM IST (Updated: 8 Aug 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், கடைக்குள் புகுந்து தொழில் அதிபர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் எருமைக்கார தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). தொழில் அதிபரான இவர், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். 
நேற்று இரவு 8.30 மணி அளவில் மணிகண்டன் கடையில் இருந்தார். அப்போது 4 மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கடைக்குள் புகுந்தனர்.கண்ணிமைக்கும் நேரத்தில், அங்கிருந்த மணிகண்டனை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். அதன்பிறகு அவர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களிலேயே தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயமடைந்த மணிகண்டன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
 போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் வடக்கு போலீசார் விரைந்து வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது கடைக்குள் மோப்பம் பிடித்துவிட்டு சாலையில் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதையடுத்து கைரேகை நிபுணர்கள் வந்து கடையில் பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் சம்பவ இடத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்தி ஒன்றை போலீசார் கைப்பற்றினர். 
கொலை சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், திண்டுக்கல் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) இம்மானுவேல் ராஜ்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
முன்விரோதம் காரணமா?
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடை நடத்துவது தொடர்பாக மணிகண்டனுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருப்பது தெரியவந்தது. எனவே முன்விரோதம் காரணமாக இந்த கொடூர கொலை சம்பவம் அரங்கேறியதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். 
ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ளபகுதியில் கடைக்குள் புகுந்து தொழில் அதிபர் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
கொலை செய்யப்பட்ட மணிகண்டனுக்கு கற்பகம் என்ற மனைவியும், விபின்பிரகாஷ்(12) என்ற மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story