நீலகிரி மாவட்டத்தில் இன்று 17 கோவில்களில் சாமி தரிசனத்துக்கு தடை
நீலகிரி மாவட்டத்தில் இன்று 17 கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு ஆடி அமாவாசை பூஜை எளிமையாக நடக்கிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக இருந்தது. தற்போது 50-க்கும் மேல் தொற்று பாதிப்பு உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் வர தடை இல்லாததால் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் பாதிப்பு உறுதியாகிறது. இதை கருத்தில் கொண்டு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
இந்த நிலையில் தமிழகத்தில் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு வருகிற 23-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஒரே இடத்தில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நடைமுறை வருகிற நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதற்கிடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்மன் கோவில்களில் ஆடி அமாவாசை பூஜை நடைபெறுகிறது. இந்த தினத்தன்று இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், சிறப்பு பூஜை மேற்கொள்ளவும் பக்தர்கள் அதிகம் பேர் கோவில்களுக்கு வர வாய்ப்பு உள்ளது.
இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த நீலகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் நேற்று, இன்று (ஞாயிற்றுக்கிழமை) என 2 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவில் நடை சாத்தப்பட்டு உள்ளது. பக்தர்கள் வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
ஊட்டி மாரியம்மன் கோவில், வேணுகோபால சுவாமி கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில், இரட்டை பிள்ளையார் கோவில், எல்க்ஹில் முருகன் கோவில், பொக்காபுரம் மாரியம்மன் கோவில் உள்பட மொத்தம் 17 கோவில்கள் மூடப்பட்டு உள்ளன. இருப்பினும் ஆடி அமாவாசையையொட்டி ஆகம விதிகளின்படி கோவில்களில் சிறப்பு பூஜைகள் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெறுகிறது. மேலும் தடுப்பு நடவடிக்கையாக கோவில்கள் சுத்தம் செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story