தஞ்சையில் ‘திடீர்’ மழை வெப்பம் தணிந்ததால் மக்கள் நிம்மதி
தஞ்சையில், திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
தஞ்சாவூர்:-
தஞ்சையில், திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
வெயிலின் தாக்கம்
கோடைகாலத்தைப்போன்று தஞ்சையில் கடந்த சில நாட்களாக சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வந்தனர். பகல் நேரங்களில் கொளுத்திய வெயில், இரவில் வீசிய வெப்பக்காற்று ஆகியவற்றால் தாங்க முடியாத வேதனையை அனுபவித்து வந்த மக்கள், இந்த கொடுமையில் இருந்து விடுபடமாட்டோமா? என்று எதிர்பார்த்து இருந்தனர்.
வருண பகவானின் கருணை எப்போது கிடைக்கும்? மழை எப்போது பெய்யும்? என தஞ்சை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். தஞ்சையில் நேற்று காலை முதல் மதியம் வரை வழக்கம்போல் வெயில் கொளுத்தியது.
திடீர் மழை
மதியத்திற்கு பிறகு வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்தது. திடீரென்று மாலை 3.50 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு வந்தன. இதனால் மழை கண்டிப்பாக பெய்யும் என மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.
பொதுகளின் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் முதலில் சாரலுடன் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் தஞ்சை மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழை 1½ மணி நேரம் பெய்தது. பின்னர் இரவு 7.30 மணி அளவில் மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணிநேரம் நீடித்தது. இந்த மழையால் தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் உள்ள ரெயில்வே கீழ்பாலத்தில் மழை தண்ணீர் தேங்கியது. அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வேறு வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் உள்ள ரெயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. தஞ்சை அய்யங்கடைதெருவில் கழிவுநீருடன் மழை தண்ணீரும் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக மக்கள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் சாலையோர வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல இடங்களில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி மழைநீருடன் கலந்து வீதியில் சென்றது.
மழையின் காரணமாக தஞ்சை அண்ணா சாலை, எம்.கே.மூப்பனார் சாலை, தெற்கு வீதி, கீழ வீதி, மேல வீதி, வடக்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
வெப்பம் தணிந்ததால் நிம்மதி
மழை பெய்த நேரத்தில் சீனிவாசபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இந்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை காணப்பட்டது.
கடந்த சில நாட்களாக வெயில் கொடுமையிலும், வெட்கையிலும் தவித்து வந்த தஞ்சை நகர மக்கள் நேற்று பெய்த பலத்த மழையால் பூமி குளிர்ந்து இதமான சூழல் காணப்பட்டதால் நிம்மதி அடைந்தனர்.
Related Tags :
Next Story