வால்பாறைக்கு செல்ல தடை; வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
கொரோனா பரவல் காரணமாக வால்பாறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஆழியாறுக்கு வந்த சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வால்பாறை,
கொரோனா 2-வது அலையின் தாக்கம் கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்தது. இதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக பாதிப்பு மற்றும் இறப்புகள் எண்ணிக்கை குறைந்தது. இதற்கிடையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் வால்பாறை, டாப்சிலிப், பரம்பிக்குளம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறில் வனத்துறை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வந்தனர். சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக சோதனை சாவடியில் கார், வேன், இருசக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
வனத்துறையினர் வால்பாறைக்கு செல்ல அனுமதி மறுத்தும், சோதனை சாவடி பகுதியில் கூட்டமாக சுற்றுலா பயணிகள் நின்றனர். இதையடுத்து வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை கூட்டம் கூட கூடாது, இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் சோதனை சாவடியில் காத்திருந்த வாகனங்களை அங்கிருந்து திருப்பி அனுப்பினர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வால்பாறை உள்ளிட்ட சில சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் வால்பாறை சென்று தங்குவதற்கு அறைகள் முன்பதிவு செய்து உள்ளோம். ஆனால் தற்போது தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறி தடுத்து நிறுத்துகின்றனர். ஆனால் அறைகள் முன்பதிவு செய்யும் போது சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று கூறுவதில்லை. இதன் காரணமாக சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வால்பாறைக்கு சுற்றுலா செல்வதை தடுக்க ஆழியாறு வனத்துறை சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வால்பாறை பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
ஆதார், ரேஷன் கார்டு போன்ற ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி விட்டு வால்பாறைக்கு செல்லலாம். இந்த தடை உத்தரவு மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும். சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வருவதை தவிர்த்து, கொரோனா பரவலை தடுக்க அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story