ரேஷன்கார்டுகளில் பெண்ணை குடும்ப தலைவராக மாற்ற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


ரேஷன்கார்டுகளில் பெண்ணை குடும்ப தலைவராக மாற்ற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 Aug 2021 2:22 AM IST (Updated: 8 Aug 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

முன்னுரிமை ரேஷன்கார்டுகளில் பெண்ணை குடும்ப தலைவராக மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம், ஆக.8-
முன்னுரிமை ரேஷன்கார்டுகளில் பெண்ணை குடும்ப தலைவராக மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரேஷன் கார்டுகள்
சேலம் மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை ரேஷன்கார்டுகள் (PHH) வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 78 ஆயிரத்து 489 ஆகும். இதில் பெண்கள் குடும்ப தலைவராக உள்ள ரேஷன் கார்டுகள் 4 லட்சத்து 22 ஆயிரத்து 506. மீதமுள்ள 54 ஆயிரத்து 126 ரேஷன் கார்டுகளில் ஆண்கள் குடும்ப தலைவராக உள்ளனர். 
இதே போல் (AAY) அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் உள்ள ரேஷன் கார்டுகள் 79 ஆயிரத்து 793 ஆகும். இதில், பெண்கள் குடும்ப தலைவராக உள்ள ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 462. இவற்றில் ஆண்கள் குடும்ப தலைவராக உள்ள ரேஷன் கார்டுகள் 13 ஆயிரத்து 973. 
விண்ணப்பிக்கலாம்
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள் 2017-ன் கீழ் ஆண்கள் குடும்ப தலைவராக உள்ள ரேஷன் கார்டுகளை பெண்ணை குடும்ப தலைவராக மாற்றம் செய்யப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை சேலம் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. 
முன்னுரிமை ரேஷன் கார்டுகள் மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் ஆண் குடும்ப தலைவராக கொண்டு ரேஷன்கார்டு வைத்திருக்கும் 68 ஆயிரத்து 99 ரேஷன்கார்டுதாரர்கள் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திலோ அல்லது அவர்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையத்திற்கோ சென்று பெண்ணை குடும்ப தலைவராக மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு மாற்றம் செய்ய விரும்புகிறவர்கள் மின்னணு ரேஷன்கார்டு மற்றும் குடும்பத்தில் உள்ள 18 வயது நிறைவடைந்த பெண் உறுப்பினருடைய புகைப்படம் ஆகியவற்றை கொண்டு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story