கொரோனா காலத்திலும் மாணவர்களுக்கு தரமான கல்வி - துணைவேந்தர் அறிவுறுத்தல்


கொரோனா காலத்திலும் மாணவர்களுக்கு தரமான கல்வி - துணைவேந்தர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 8 Aug 2021 2:35 AM IST (Updated: 8 Aug 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா காலத்திலும் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்று துணைவேந்தர் பிச்சுமணி அறிவுறுத்தினார்.

பேட்டை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 52-வது கல்விசார் நிலைக்குழு கூட்டம் இணைய வழி மூலம் நடந்தது. துணைவேந்தர் பிச்சுமணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தனிநபரின் வாழ்க்கை மற்றும் சமூகத்தில் கல்வி மிகவும் முக்கியமானது. கொரோனா காலத்தில் கல்வி பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. இதனை எதிர்கொள்ளவும் தயாராக வேண்டும். நமது நாட்டில் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஒரு கோடி பேரில் 252.7 பேர் மட்டுமே ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர். பிற நாடுகளில் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் அதிகமாக உள்ளனர்.

எதிர்காலத்தில் வேலைவாய்ப்பிற்காக கற்பனைத்திறன், வாழ்நாள் கற்றல், தொழில்நுட்பம் சார்ந்த அறிவு, பேச்சுத்திறன், முக்கிய தீர்மானங்களை எடுப்பது போன்ற காரணிகளை புதிய பாடத்திட்டத்தில் கொண்டு வரலாம்.
கல்வித்திட்டம் 4.0-ஐ பயன்படுத்தி பல்கலைக்கழகம் மற்றும் அதுசார்ந்த கல்லூரிகளில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மாணவர்களை 5.0-க்கும் தயார்படுத்த முடியும். 

மாணவர்களுக்கு டிஜிட்டல் வழி கல்வியை மேம்படுத்துவதற்கான வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கப்பட உள்ளது. தொலைநெறி தொடர் கல்வியில் புதிதாக 10 பாடங்களை சேர்க்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு மாணவர் சேர்க்கையில் புதிதாக 5 படிப்புகள் இணைக்கப்பட்டு உள்ளன. தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சிகள் கொரோனா காலத்திலும் மாணவர்களுக்கு கிடைக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்தனர். பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) மருதுகுட்டி, பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story