கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் கடந்த மாதம் (ஜூலை) 19 மற்றும் 22-ந் தேதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்பட்டு இருந்தது. அதாவது மொழி பாடங்களுக்கான தேர்வு ஒரே நாளிலும், அறிவியல், கணிதம், புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு ஒரே நாளிலும் நடந்திருந்தது. இந்த தேர்வை 8½ லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி இருந்தார்கள்.
இந்த நிலையில், வினாத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகள் இடையே ஏற்பட்டது. இதற்கிடையில், நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற தகவல்கள் வெளியானது. ஆனால் திட்டமிட்டபடி நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.
முடிவுகள் நாளை வெளியீடு
பள்ளி கல்வித்துறைக்கு மந்திரி நியமிக்கப்படாத காரணத்தால், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (திங்கட்கிழமை) வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பள்ளி, கல்வித்துறைக்கு இதுவரை மந்திரி நியமிக்கப்படாமல் இருந்து வந்தார். தற்போது பள்ளி, கல்வித்துறை மந்திரியாக பி.சி.நாகேசை அறிவித்து நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, மந்திரி பி.சி.நாகேசுடன், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து ஆலோசித்து நாளை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Related Tags :
Next Story