ஊரடங்கின் போது தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கிரிமினல் வழக்கு


ஊரடங்கின் போது தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கிரிமினல் வழக்கு
x
தினத்தந்தி 7 Aug 2021 9:40 PM GMT (Updated: 7 Aug 2021 9:40 PM GMT)

பெங்களூருவில் இரவு ஊரடங்கு அமலில் இருக்கும்போது, தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

பெங்களூரு: பெங்களூருவில் இரவு ஊரடங்கு அமலில் இருக்கும்போது, தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இரவு ஊரடங்கு

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்த நிலையில் கர்நாடகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, மராட்டியத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலம் கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கும் வகையில் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

மேலும் கேரள, மராட்டிய எல்லையில் அமைந்து உள்ள மைசூரு, குடகு, சாம்ராஜ்நகர், தட்சிண கன்னடா, பெலகாவி உள்பட 8 மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுபோல மாநிலம் முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அமல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே இரவு ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இருந்தது. தற்போது ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

கிரிமினல் வழக்கு

இந்த நிலையில் பெங்களூருவில் இரவு ஊரடங்கை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

கொரோனா பரவலை தடுக்க அரசு அமல்படுத்தி உள்ள இரவு ஊரடங்கு பெங்களூருவில் தீவிரமாக அமல்படுத்தப்படும். இரவு ஊரடங்கின் போது யாரும் தேவையின்றி வெளியே சுற்ற கூடாது. சரியான காரணம் இன்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேவையின்றி சுற்றுபவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

கடைகள், உணவகங்கள், பார்களை இரவு 9 மணிக்குள் மூட வேண்டும். இல்லாவிட்டால் அவைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைப்பார்கள். ரெயில், விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் டிக்கெட்டை காண்பித்து செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story