பெண் விவகாரத்தில் ரவுடி குத்திக்கொலை; நண்பர் உள்பட 4 பேர் கைது
பெங்களூருவில் பெண் விவகாரத்தில் ரவுடி குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நண்பர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு: பெங்களூருவில் பெண் விவகாரத்தில் ரவுடி குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நண்பர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரவுடி மஜர்கான்
பெங்களூரு டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் மஜர்கான் (வயது 48). அதேப்பகுதியில் வசித்து வருபவர் பெரோஸ். மஜர்கானும், பெரோசும் நண்பர்கள் ஆவார்கள். மேலும் 2 பேரும் ரவுடி தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் 2 பேரும் மீதும் கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட சில வழக்குகள் பதிவாகி உள்ளன.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது மஜர்கான் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு இருந்தது. அவரிடம் செய்யும் தொழில் உள்ளிட்ட விவரங்களை போலீசார் பெற்று இருந்தனர்.
கத்திக்குத்து
இந்த நிலையில் பெரோஸ் ஒரு பெண்ணுடன் பழகி வந்தார். அந்த பெண்ணுடன் மஜர்கானுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருந்தது. இதுபற்றி அறிந்த பெரோஸ் பெண்ணுடன் பழகுவதை கைவிடும்படி மஜர்கானிடம் கூறி உள்ளார். ஆனால் பெண்ணுடனான பழக்கத்தை கைவிட மஜர்கான் மறுத்து விட்டதாக தெரிகிறது. அதே நேரம் அந்த பெண் பெரோசுடன் நெருங்கி பழகி வந்ததாக தொிகிறது.
இதனால் மஜர்கான் அந்த பெண்ணிடமும், பெரோசுடனும் அடிக்கடி தகராறில் ஏற்பட்டு வந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் பெரோசின் வீட்டிற்கு சென்ற மஜர்கான் அந்த பெண்ணுடனான பழக்கத்தை கைவிடும்படி கூறியுள்ளார். ஆனால் இதற்கு பெரோஸ் மறுத்தார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. அப்போது பெரோசும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து மஜர்கானை கத்தியால் குத்தி உள்ளனர்.
கைது
இதில் பலத்த காயம் அடைந்த மஜர்கான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் டி.ஜே.ஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மஜர்கானின் உடலை பார்வையிட்டு விசாரித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் பெண் விவகாரத்தில் மஜர்கானை, பெரோஸ் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து டி.ஜே.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பெரோஸ் உள்பட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. பெண் விவகாரத்தில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story