ரூ.5 லட்சம் ‘குட்கா' பறிமுதல்; 5 பேர் கைது குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது அம்பலம்


ரூ.5 லட்சம் ‘குட்கா பறிமுதல்; 5 பேர் கைது குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது அம்பலம்
x
தினத்தந்தி 8 Aug 2021 3:48 AM IST (Updated: 8 Aug 2021 3:48 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர்

திருவட்டார்:
திருவட்டார் அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர்.
வாகன சோதனை
திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கப்பெருமாள் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை  சுவாமியார்மடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 6 மூடை குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
இதையடுத்து குட்கா மூடைகள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் ஆட்டோ டிரைவர் மருதூர்குறிச்சி கைசாலவிளையை சேர்ந்த விஜயராஜ் (வயது 44) என்பவரிடம் துருவி துருவி விசாரணை  நடத்தினர்.  
குட்கா பறிமுதல்
பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில், சுவாமியார்மடம் புலிப்புனம் சானல்கரை பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த பகுதியில் உள்ள குடோன் முன்பு ஒரு மினி லாரி நின்று கொண்டிருந்தது. இதனை கண்காணித்த போலீசார் அதிரடியாக மினி லாரி மற்றும் குடோனில் சோதனை செய்தனர். அப்போது, அவற்றில் குட்கா மூடைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்தடுத்து போதைப்பொருட்கள் சிக்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், பெங்களூருவில் இருந்து குட்காவை கடத்தி கொண்டு வந்து குடோனில் பதுக்கி வைத்து குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் விற்பனை செய்த தகவல் வெளியானது. 
இதையடுத்து மினி லாரி மற்றும் குட்கா மூடைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது. 
5 பேர் கைது
மேலும் இதுதொடர்பாக குட்கா மூடைகளை குடோனில் பதுக்கி வைத்திருந்த புன்னக்காட்டுவிளையை சேர்ந்த தோமஸ் (40), குட்காவை விற்பனை செய்த காட்டாத்துறை ரத்தினகுமார் (50), சேலத்தை சேர்ந்த லாரி டிரைவர்கள் சந்தோஷ் (24), செல்வம் (40) மற்றும் ஆட்டோ டிரைவர் விஜயராஜ் ஆகிேயாரை போலீசார் கைது செய்தனர். 

Next Story