நான்கு வழிச்சாலை பணிகள் டிசம்பர் மாதம் நிறைவடையும்


நான்கு வழிச்சாலை பணிகள்  டிசம்பர் மாதம் நிறைவடையும்
x
தினத்தந்தி 8 Aug 2021 4:12 AM IST (Updated: 8 Aug 2021 4:12 AM IST)
t-max-icont-min-icon

காவல்கிணறு- நாகர்கோவில் நான்கு வழிச்சாலை பணிகள் வருகிற டிசம்பர் மாதம் நிறைவடையும் என்று விஜய் வசந்த் எம்.பி. கூறினார்.

நாகர்கோவில்:
காவல்கிணறு- நாகர்கோவில் நான்கு வழிச்சாலை பணிகள் வருகிற டிசம்பர் மாதம் நிறைவடையும் என்று விஜய் வசந்த் எம்.பி. கூறினார்.
மனுக்கள் வாங்கினார்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் விஜய்வசந்த் நேற்று நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள அவருடைய அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். 
பின்னர் விஜய்வசந்த் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய மந்திரிகளுடன் சந்திப்பு
நாடாளுமன்றத்தில் குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதியாக பதவியேற்றுக் கொண்டது மிகப்பெருமையாக இருந்தது. அதுமட்டுமல்ல எனது தந்தை வசந்த குமார் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.
மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை மந்திரியை சந்தித்து குமரி மாவட்ட சாலைகளை சீரமைக்கவும், மீன்வளத்துறை மந்திரியை சந்தித்து மீனவர்களுக்கு சேட்டிலைன் போன் வழங்குவது மட்டுமல்லாமல், காணாமல் போகும் மீனவர்களை விரைந்து மீட்க ஹெலிகாப்டர் தளம் மற்றும் ஹெலிகாப்டர் வசதி ஏற்படுத்தி தரவும் கோரிக்கை வைத்துள்ளேன். சாமிதோப்பில் விமான நிலையம் அமைக்க விமான போக்குவரத்து துறை மந்திரியை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். 
நான்கு வழிச்சாலை பணி
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சாலைகளை விரைவாக சீரமைக்க கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் கூறியுள்ளோம். அதுதொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக கலெக்டர் கூறினார்.
நான்கு வழிச்சாலை திட்டப் பணிகளை சமீப காலமாக வேகப்படுத்தி உள்ளனர். பாலங்களைத்தவிர மற்ற சாலைப்பணிகள் நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் 70 இடங்களில் பாலங்கள் அமைக்க வேண்டியுள்ளது. அதிகபட்சமாக 2 ஆண்டுகளில் இந்த பணிகள் முடிவடைந்து விடும். காவல்கிணறு- நாகர்கோவில் நான்குவழிச்சாலை பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிந்து விடும்.
தவறு
நாடாளுமன்றத்தில் பெகாசஸ் பிரச்சினை தொடர்பாக பேச எதிர்க்கட்சிகளை அனுமதிக்காதது ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும். முடிவு எடுப்பது அவர்களாக இருந்தாலும், ஜனநாயக முறைப்படி எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும். அதையே மறுக்கிறார்கள். இதனால் அவர்கள் மீது தவறு இருப்பதைத்தான் இது காட்டுகிறது.
இவ்வாறு விஜய் வசந்த் கூறினார்.

Next Story