தாம்பரம் ரெயில் நிலையத்தில் தவறான ஒலி பெருக்கி அறிவிப்பால் பயணிகள் அவதி


தாம்பரம் ரெயில் நிலையத்தில் தவறான ஒலி பெருக்கி அறிவிப்பால் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 8 Aug 2021 3:03 PM IST (Updated: 8 Aug 2021 3:04 PM IST)
t-max-icont-min-icon

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று காலை 8.30 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தின் 7-வது நடைமேடையில் வந்து செல்லும் எனவும், அதன் டி-1 பெட்டி, 16-வது பெட்டியாக வருமெனவும் நடைமேடையில் உள்ள ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பயணிகள் 16-வது பெட்டி வந்து நிற்கும் இடத்துக்கு சென்று ரெயிலில் ஏறுவதற்காக காத்திருந்தனர். ஆனால் 8.35 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் வந்த அந்த ரெயிலின் டி-1 பெட்டி, எஞ்ஜினில் இருந்து 4-வது பெட்டியாக இணைக்கப்பட்டு இருந்தது. இடையில் சுமார் 10 பெட்டிகள் இருந்ததை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் முதியவர்கள் உள்ளிட்ட சுமார் 20 பயணிகள் அவதிப்பட்டு வெவ்வேறு பெட்டிகளில் ஏறி பின்னர் ஒவ்வொரு பெட்டியாக கடந்து டி-1 பெட்டியை சென்றடைந்தனர். மேலும் சிலர் ரெயில் புறப்படுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட பெட்டியில் ஏறிவிடவேண்டும் என கீழே விழுந்து எழுந்து சென்ற நிலையும் ஏற்பட்டது.

ரெயில்வே அதிகாரிகளின் அஜாக்கிரதை குறித்து உயர் அதிகாரிகளுக்கு பயணிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறால் இதுபோன்ற தவறு நடந்து விட்டதாகவும், வரும் காலங்களில் இது போன்று நடைபெறாது எனவும் அவர்கள் உறுதி அளித்தனர். இருப்பினும் ரெயில்வே அதிகாரிகளின் அலட்சியப்போக்கு கண்டிக்கத்தக்கது என பயணிகள் புகார் தெரிவித்தனர்.

Next Story