கடையில் தீ விபத்து: புரோட்டா மாஸ்டர் உள்பட 5 பேர் காயம்
சென்னை கோடம்பாக்கம் பரதீஸ்வரர் காலனி மெயின் சாலையில் பார்த்திபன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உன்னிகிருஷ்ணன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக துரித உணவகம் வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை வழக்கம் போல் கடையின் ஊழியர்கள் கடையை திறந்து இரவு உணவு தயாரிப்பதற்கான பணிகளை செய்துள்ளனர்.
அப்போது கடைக்கு வெளியே புரோட்டா போடுவதற்காக வைத்திருந்த கேஸ் சிலிண்டரை மாஸ்டர் தீபக் பற்ற வைத்தார். அப்போது திடீரென தீப்பற்றி எரிந்தது. ஏற்கனவே கேஸ் கசிவு ஏற்பட்டு கடை முழுவதும் பரவி இருந்ததால் தீயானது, கடை முழுவதும் பரவியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அசோக்நகர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
மேலும் இந்த தீ விபத்தில் புரோட்டா மாஸ்டரான தீபக் படுகாயம் அடைந்துள்ளார். மற்ற ஊழியர்களான ஜெய்னுல், நாகராஜன், பழனியாண்டி, சோட்டா ஆகியோர் காயமடைந்தனர். தீக்காயமடைந்த 5 பேரையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story