சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் அருகே ‘ஏ.கே.47’ போலி துப்பாக்கிகளுடன் வந்த சினிமா இயக்குனரின் உதவியாளர்
சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் அருகே உரிய அனுமதி இன்றி ‘ஏ.கே.47’ போலி துப்பாக்கிகளுடன் மொபட்டில் வந்த சினிமா இயக்குனரின் உதவியாளரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
‘ஏ.கே.47’ துப்பாக்கி
சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் அருகே 100 அடி சாலையில் நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த வாலிபரை, சந்தேகத்தின்பேரில் மடக்கி சோதனை செய்தனர்.அவர் வைத்து இருந்த அட்டைப்பெட்டியில் இரண்டு ‘ஏ.கே.47’ துப்பாக்கிகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த வாலிபரை கோயம்பேடு போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
இயக்குனரின் உதவியாளர்
விசாரணையில் அவர், பெரம்பூர் கஸ்தூரிபாய் காலனி, 3-வது பிளாக் பகுதியை சேர்ந்த விக்டர் (வயது 27) என்பதும், பிரபல திரைப்பட இயக்குனர் பாண்டிராஜிடம் உதவியாளராக வேலை பார்த்து வருவதும் தெரிந்தது.தற்போது நடிகர் சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் புதிதாக இயக்கி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற சினிமா படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புக்கு தேவையான இந்த இரண்டு ‘ஏ.கே.47’ போலி துப்பாக்கிகளை பஸ் மூலம் காரைக்குடிக்கு அனுப்பி வைப்பதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
பார்ப்பதற்கு உண்மையான ‘ஏ.கே.47’ துப்பாக்கி போன்றே காட்சி அளிக்கும் அந்த போலி துப்பாக்கிகளை அவர் உரிய அனுமதி இல்லாமல் கொண்டு சென்றது தொடர்பாக விக்டரிடம் கோயம்பேடு போலீசார் தொடர்ந்து விசாரித்து
வருகின்றனர்.
Related Tags :
Next Story