அய்யம்பேட்டை பகுதியில் யூரியா தட்டுப்பாடு குறுவை நெற்பயிருக்கு மேலுரம் இட முடியாமல் விவசாயிகள் அவதி
அய்யம்பேட்டை பகுதியில் தொடரும் யூரியா உர தட்டுப்பாட்டால் குறுவை நெல் பயிருக்கு மேலுரம் இட முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர்.
அய்யம்பேட்டை:-
அய்யம்பேட்டை பகுதியில் தொடரும் யூரியா உர தட்டுப்பாட்டால் குறுவை நெல் பயிருக்கு மேலுரம் இட முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர்.
குறுவை சாகுபடி
மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 10 நாட்களுக்கு பிறகு கடைமடை பகுதிகளை வந்தடைந்தது. பம்பு செட் வசதியில்லாத விவசாயிகள் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை கொண்டு நாற்றங்கால் தயார் செய்து, விதை விட்டு தற்போது குறுவை நடவு பணிகள் செய்துள்ளனர்.
அய்யம்பேட்டை அருகே மாகாளிபுரம், கணபதி அக்ரஹாரம், வீரமாங்குடி, உள்ளிக்கடை, பெருமாள் கோவில், இலுப்பக்கோரை, மணலூர், பட்டுக்குடி, புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது குறுவை நடவு பணிகள் நிறைவடைந்து உள்ளது. இந்த நிலையில் இப்பகுதியில் நிலவும் கடுமையான யூரியா தட்டுப்பாட்டால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘பம்பு செட் வசதியுள்ள விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்குள் குறுவை நடவு பணிகளை முடித்து விட்டனர். பம்பு செட் வசதியில்லாத விவசாயிகள் பலரும் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு தற்போது நடவு பணிகளை செய்துள்ளனர்.
விலை உயர்வு
உரம், டீசல் விலை உயர்வு, கூலியாட்கள் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சினைக்களுக்கிடையே தற்போது குறுவை சாகுபடி பணிகளை செய்து வருகிறோம். நடவு செய்யும் வயலுக்கு அடி உரம் இடவும், வளர்ச்சிப் பருவத்தில் உள்ள குறுவை பயிருக்கு மேலுரம் இடவும் யூரியா உரம் அவசியமாகும். மேலும் இப்பகுதியில் பயிரிட்டு வளர்ச்சி பருவத்திலுள்ள வாழை, கரும்பு பயிர்களுக்கும் யூரியா உரம் இட வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். இந்த நிலையில் தற்போது இப்பகுதியில் யூரியா உரம் கடும் தட்டுப்பாடாக உள்ளது.
இப்பகுதியில் உள்ள தனியார் உர கடைகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் இப்போது யூரியா உரம் கிடைப்பதில்லை. இதனால் நெல், கரும்பு, வாழை நடவு செய்துள்ள விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பல இடங்களில் குறுவை தொகுப்பு திட்டத்திலும் யூரியா உரம் வழங்கப்படுவது இல்லை. இதனால் விவசாயிகள் பலரும் அடி உரம் இடாமல் சாகுபடி பணிகளை செய்துள்ளனர். இப்போது மேலுரம் இடுவதற்கு யூரியா அவசியமாகும்.
மகசூல் இழப்பு
மேலுரம் இடவில்லை என்றால் பயிர்களின் வளர்ச்சி குன்றி கடுமையான மகசூல் இழப்பை விவசாயிகள் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே தற்போதைய நிலையில் விவசாயிகள் நலன் கருதி யூரியா உரத்தை அதிக அளவில் விற்பனைக்கு விடுவிக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story