ஆடி அமாவாசையையொட்டி தடையை மீறி முல்லைப்பெரியாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்


ஆடி அமாவாசையையொட்டி  தடையை மீறி முல்லைப்பெரியாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x
தினத்தந்தி 8 Aug 2021 8:48 PM IST (Updated: 8 Aug 2021 8:48 PM IST)
t-max-icont-min-icon

ஆடி அமாவாசையையொட்டி தடையை மீறி முல்லைப்பெரியாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.


கம்பம்:
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சுருளி அருவி உள்ளது. இது தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத்தலமாகவும், ஆன்மிகத்தலமாகவும் விளங்குகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் இங்கு, ஆடி மாத அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துவது சிறப்பானதாக கருதப்படுகிறது. 
இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் சுருவி அருவி பகுதிக்கு வருகை தருவர். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சுருளி அருவியில் தர்ப்பணம் செய்வதற்கும், குளிப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. 
இந்நிலையில் நேற்று ஆடி அமாவாசை என்பதால் சுருளி அருவிக்கு ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்தனர். அவர்களை சுருளிப்பட்டி க.விலக்கு பகுதியில் ராயப்பன்பட்டி போலீசாரும், சுருளிப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினரும் தடுப்புகள் அமைத்து திருப்பி அனுப்பினர். 
முல்லைப்பெரியாறு
இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பூஜை பூ, பழம், தேங்காய், வேட்டி, துண்டு, எள், அரிசி, உணவு உள்ளிட்ட பொருட்களை சுருளிப்பட்டி முல்லைப்பெரியாற்றில் சன்னியாசிகளை வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். 
இதற்காக சன்னியாசிகள், முல்லைப்பெரியாற்றின் கரையோரத்தில் வரிசையாக அமர்ந்திருந்தனர். தர்ப்பண வழிபாடுக்கு பிறகு அவர்கள், ஆற்றில் நீராடி மகிழ்ந்தனர். தற்போது முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் அசம்பாவித சம்பவம் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 வீரபாண்டி 
இதேபோல் வீரபாண்டி முல்லைப்பெரியாற்றின் கரையில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு ஆற்றில் நீராடினர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள கன்னீஸ்வரமுடையார் கோவிலுக்கு சென்று அங்கிருந்த சிவன் மற்றும் விநாயகர் சன்னதியில் மோட்ச விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

Next Story