ஆண்டிப்பட்டி அருகே பழைய இரும்பு குடோனில் பயங்கர தீ ரூ.25 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்


ஆண்டிப்பட்டி அருகே  பழைய இரும்பு குடோனில் பயங்கர தீ  ரூ.25 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 8 Aug 2021 8:53 PM IST (Updated: 8 Aug 2021 8:53 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே பழைய இரும்பு குடோனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

ஆண்டிப்பட்டி :
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி (வயது 55). இவர், பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். 
இவருக்கு சொந்தமான குடோன் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரத்தில் உள்ளது. இதில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் இரவு பாண்டி வழக்கம்போல குடோனை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றார். குடோனுக்கு காவலாளி யாரும் கிடையாது. இந்தநிலையில், நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் குடோன் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதனைக்கண்டு                   அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து ஆண்டிப்பட்டியில் உள்ள தீயணைப்பு நிைலயத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்புபடையினர், விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 
ரூ.25 லட்சம் பொருட்கள் சேதம்
காற்று அதிகமாக வீசியதால், சிறிதுநேரத்தில் மளமளவென பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர். 
இதையடுத்து தேனியில் இருந்து கூடுதலாக 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. 
இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து            நாசமானது. இந்த சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசில் குடோன் உரிமையாளர் பாண்டி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து      குடோனில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி இருப்பது தெரியவந்துள்ளது.

Next Story