நாகை மாவட்டத்தில் களையிழந்த ஆடி அமாவாசை
கடற்கரைகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டதால் நாகை மாவட்டத்தில் ஆடி அமாவாசை களையிழந்தது. தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
வெளிப்பாளையம்:
கடற்கரைகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டதால் நாகை மாவட்டத்தில் ஆடி அமாவாசை களையிழந்தது. தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆடி அமாவாசை
இந்துக்கள் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, சோமாவதி அமாவாசை தினங்களில் தங்களது முன்னோர்களுக்கு கடற்கரை மற்றும் ஆற்றங்கரைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். நாகை புதிய கடற்கரை மற்று ஆற்றங்கரைகளில் ஆடி அமாவாசை தினத்தன்று பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். தற்போது கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதில் வாரத்தின் கடைசி நாட்களான வெள்ளி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்களுக்கு கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை மற்றும் கடற்கரைகளில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைகள் வெறிச்சோடின
இதை தொடர்ந்து ஆடி அமாவாசை அன்று கடற்கரைகளில் தர்ப்பணம் கொடுக்க தடை விதித்து நாகை மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த நிலையில் நேற்று ஆடி அமாவாசையையொட்டி நாகையில் உள்ள கடற்கரைகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது. கடற்கரைக்கு செல்லும் நுழைவு வாயிலில் இரும்பு தடுப்பு அமைத்து வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம்
ஒரு சிலர் தடையை மீறி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நாகை புதிய கடற்கரைக்கு வந்தனர்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
தர்ப்பணம் செய்ய செல்ல தடுத்ததால் பொது மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மேலும் கடற்கரை தெருக்களில் ஒரு சில இடங்களில் பொதுமக்கள் நீராடி விட்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
வேதாரண்யம்
வேதாரண்யத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் கோடியக்கரை மற்றும் வேதாரண்யம் கடலில் புனித நீராடி கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஆடி அமாவாசை அன்று கடற்கரையில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டதால் நேற்று போலீசார் கடற்கரைக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் கார், வேன், இருசக்கர வாகனங்களில் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி திரும்பி செல்ல அறிவுறுத்தினர்.இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வேதாரண்யேஸ்வரர் கோவில் மூடல்
தர்ப்பணம் கொடுக்க யாரும் வராததால் வேதாரண்யம், கோடியக்கரை கடற்கரைகள் வெறிச்சோடி கிடந்தன. வேதாரண்யேஸ்வரர் கோவிலும் மூடப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் கோவில் வாசலில் நின்று தரிசனம் செய்து சென்றனர்.
இதேபோல வேளாங்கண்ணி அருகே காமேஸ்வரம் கடற்கரை, நாகூர் சில்லடி கடற்கரை, பட்டிச்சேரி கடற்கரை உள்ளிட்ட நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரை மற்றும் ஆற்றங்கரைகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கோவில்கள் அடைக்கப்பட்டிருந்ததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story