கனடாவில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரியிடம் ரூ.4 லட்சம் மோசடி
கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, பட்டதாரியிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த நைஜீரியா நாட்டை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்:
முகநூல் மூலம் நட்பு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது 43). இவர், எம்.எஸ்.சி., எம்.பில்., படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தார். இவருக்கு, முகநூல் மூலம் நைஜீரியா நாட்டை சேர்ந்த உச்சனா கிறிஸ்டியன் (35) என்பவரின் நட்பு கிடைத்தது.
அதன்பிறகு 2 பேரும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி வந்தனர். இந்த நிலையில் வேலை இல்லாமல் சிரமப்படுவதாக உச்சனா கிறிஸ்டியனிடம் வெங்கடாஜலபதி தெரிவித்தார்.
அப்போது தனக்கு கனடாவில் உள்ள நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அந்த நிறுவனங்களில் தன்னால் வேலை வாங்கி தரமுடியும் என்று வெங்கடாஜலபதியிடம் உச்சனா கிறிஸ்டியன் உறுதி அளித்தார்.
ஆன்லைன் மூலம் ரூ.4 லட்சம்
மேலும் கனடா நாட்டில் வேலை செய்வதற்கான விசா மற்றும் காப்பீடு செய்வதற்காக ரூ.4 லட்சத்து 4 ஆயிரம் செலவாகும் என்றும் அவர் தெரிவித்தார். இதனை உண்மை என்று நம்பிய வெங்கடாஜலபதியும் அவர் கேட்ட தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டார்.
ஆனால் அவ்வளவு தொகையை தன்னால் உடனடியாக கொடுக்க முடியாது என்றும், சிறிது சிறிதாக கொடுப்பதாகவும் உச்சனா கிறிஸ்டியனிடம் தெரிவித்தார். இதற்கு உச்சனா கிறிஸ்டியனும் சம்மதம் தெரிவிக்கவே, கடந்த 2 ஆண்டுகளில் ஆன்லைன் மூலம் சிறிது சிறிதாக ரூ.4 லட்சத்து 4 ஆயிரத்தை உச்சனா கிறிஸ்டியனுக்கு வெங்கடாஜலபதி அனுப்பியுள்ளார்.
வாலிபர் கைது
இந்த நிலையில் கடந்த மாதம் மீண்டும் வெங்கடாஜலபதியை தொடர்புகொண்ட உச்சனா கிறிஸ்டியன், மேலும் ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் கொடுத்தால் உடனடியாக கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறினார். இதனால் சந்தேகமடைந்த வெங்கடாஜலபதி, திண்டுக்கல் சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சந்திரனிடம் இதுகுறித்து புகார் கொடுத்தார்.
அதன்பேரில் அவரது உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ரெய்கானா மற்றும் தனிப்படை போலீசார், வெங்கடாஜலபதியை உச்சனா கிறிஸ்டியன் தொடர்புகொண்ட செல்போன் எண் மூலம் விசாரணை நடத்தினர்.
அப்போது உச்சனா கிறிஸ்டியன் நைஜீரியாவில் இல்லை என்பதும், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பெருந்துறைக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், உச்சனா கிறிஸ்டியனை மடக்கிப்பிடித்து கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
துணி வியாபாரத்தில் நஷ்டம்
கைதான உச்சனா கிறிஸ்டியன், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நைஜீரியாவில் இருந்து கடந்த 2009-ம் ஆண்டு துணி வியாபாரம் செய்வதற்காக தமிழகத்துக்கு வந்தேன். அந்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. நான், நைஜீரியா நாட்டை சேர்ந்தவன் என்பதால் எனது முகநூல் பக்கத்தில் நண்பர்களாக இருப்பவர்கள் என்னிடம் வேலை வாங்கி தரும்படி கூறினர்.
நானும் அவர்களுக்கு வேலை வாங்கி தருவது போல் நடித்து, அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை பெற்று வந்தேன். அதுபோல தான் பள்ளப்பட்டியை சேர்ந்த வெங்கடாஜலபதியிடம் இருந்தும் முகநூல் மூலம் நட்பாக பேசி பணத்தை பெற்றேன்.
நான் வெளிநாட்டில் இருப்பதாக அவர்கள் நினைப்பதால் என் மீது புகார் கொடுக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் வெங்கடாஜலபதி புகார் கொடுத்ததால் போலீசாரிடம் தற்போது சிக்கிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட உச்சனா கிறிஸ்டியன், நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு மும்தாஜ் உத்தரவிட்டார்.
அதன்பேரில், உச்சனா கிறிஸ்டியனை மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். நைஜீரிய வாலிபர் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம், நிலக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story