கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வாரவிடுமுறையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கொடைக்கானல்:
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. வாரவிடுமுறை தினமான கடந்த 2 நாட்களாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் உள்பட சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கொரோனா அச்சுறுத்தலால், சுற்றுலா இடங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.
கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் வேறு வழியின்றி ஏரிச்சாலையில் சுற்றி வந்து பொழுதை கழித்தனர். இதனால் அங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கிராம பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டனர். இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் தங்கும் விடுதிகளில் அறைகள் நிரம்பின. இதனால் விடுதிகளில் அறை கிடைக்காமல் திரும்பினர். வாலிபர்கள் ஏரியை சுற்றியுள்ள நடைப்பயிற்சி மேடையில் படுத்து உறங்கினர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதன் காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story