டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை
மூங்கில்துறைப்பட்டு அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மூங்கில்துறைப்பட்டு
2 ஆண்டுகளாக போராட்டம்
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பொருவளூர் எல்லைக்குட்பட்ட பகுதியான சாத்தனூர் வலதுபுற கால்வாய் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் மதுக்கடையை மூடவில்லை.
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர். அதில் குடியிருப்பு மற்றும் பள்ளிக்கூடம் அமைந்துள்ள பகுதியில் மதுக்கடை இருப்பதால் குடிபிரியர்கள் போதையில் அந்த வழியாக செல்லும் பெண்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என தெரிவித்திருந்தனர். இதையடுத்து மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
முற்றுகை
இந்த நிலையில் ஒரு மாதம் ஆகியும் டாஸ்மாக் கடை மூடப்படாததால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று காலை டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுபற்றிய தகவலறிந்து வந்த சங்கராபுரம் தாசில்தார் சையத் காதர், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தார் சையத் காதர், 2 நாள் மட்டும் டாஸ்மாக் கடை திறந்திருக்கும், நாளை மறுநாள்(புதன்கிழமை) முதல் மதுக்கடை செயல்படாது என்று உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story