கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பென்னாகரம்:
தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரள மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி நீரும் என மொத்தம் 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது அதன்படி நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) மாலைக்குள் ஒகேனக்கல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story