திருநங்கைகள் சுய கவுரவத்துடன் வாழ வேண்டும். நீதிபதிகள் பேச்சு.
அரசு அளிக்கும் சலுகைகளை பயன்படுத்தி திருநங்கைகள் சுயகவுரவத்துடன் வாழவேண்டு்ம் என்று நீதிபதிகள் பேசினர்.
திருப்பத்தூர்
சட்ட விழிப்புணர்வு முகாம்
திருப்பத்தூர் வட்ட சட்டப்பணிகள் குழு, சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது. கூடுதல் அமர்வு நீதிபதி தோத்திரமேரி தலைமை தாங்கினார். சட்டப்பணிகள் குழு வழக்கறிஞர் முருகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு சார்பு நீதிபதி ஜெயப்பிரகாஷ், சார்பு நீதிபதி அசீன் பானு, மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரி, தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் குமார், மாவட்ட தொழில் மைய மேலாளர் ரமேஷ், மற்றும் அரசு மருத்துவர் செந்தில் குமாரி ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் நீதிபதிகள் பேசியதாவது:-
திருநங்கைகளுக்கான பாதுகாப்பு உரிமைகள் சட்டப்படி யாரேனும் உங்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றினாலோ பொது வழியில் வரக்கூடாது என மிரட்டினாலோ, வார்த்தையால், உடல் ரீதியாக, மன ரீதியாக துன்புறுத்தினால் நீங்கள் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். காவல்துறையில் புகார் அளிக்கலாம். சட்டத்தின்படி உங்களது உரிமைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நீங்கள் திருநங்கைக்கான அடையாள அட்டையை மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். அந்த அடையாள அட்டையை பயன்படுத்தி அரசின் பல்வேறு சலுகைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். சமூகத்துடன் ஒன்றி வாழ உங்களுக்கு உரிமை உள்ளது. அது உங்களிடம் இருந்து பறிக்கப்பட்டால் நீங்கள் காவல்துறையில் புகார் அளிக்கலாம். நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் நீங்கள் நீதிமன்றத்தில் உள்ள வட்ட சட்டப்பணிகள் குழுவை அணுகலாம்.
சுய கவுரவத்துடன்
சட்டம் சார்ந்த மற்றும் சட்டம் சாராத எந்த ஒரு தேவைகளுக்கும் நீங்கள் இந்த குழுவை அணுகலாம். தனி ஒரு ஆளாக நீங்கள் இந்த அலுவலகத்தை அணுகி உங்களுக்கு தேவையான நியாயமான கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ளலாம். அரசு அளிக்கும் சலுகைகள் பயன்படுத்தி ஏதேனும் ஒரு தொழிலைத் தொடங்கி சுயகவுரவத்துடன் வாழ வேண்டும். உங்களுக்கு ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் சட்டபூர்வமாக அதை அணுக வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
தொடர்ந்து கொரோனா கால சிறப்பு நிவாரண நிதியையும், சமூகநலத் துறையின் அடையாள அட்டையையும் திருநங்கைகளுக்கு வழங்கினர்.
இந்த முகாமிற்கான ஏற்பாட்டை சட்டப்பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் தினகரன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story