வேலைவாங்கி தருவதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்


வேலைவாங்கி தருவதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 8 Aug 2021 10:54 PM IST (Updated: 8 Aug 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை

வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

வேலை தேடிய பெண்

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் 26 வயது பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் அந்த பெண் வேலை இருந்தால் தனக்கு தெரிவிக்கும்படி நண்பர்கள், உறவினர்களிடம் கூறி இருந்தார். 

இதை அறிந்த அவரது உறவினரான தேனிமாவட்டம் போடியை சேர்ந்த ராணுவ வீரரான சரவணன் (38) என்பவர் அந்த பெண்ணிடம் தொடர்பு கொண்டு, கோவையில் தனக்கு தெரிந்தவர்கள் உள்ளார்கள், அவர்கள் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறினார். 

ஓட்டலுக்கு அழைத்தார் 

இந்த நிலையில் கடந்த மாதம் அந்த பெண்ணுக்கு தொடர்பு கொண்ட சரவணன், வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன், எனவே நான் கோவை வருகிறேன் என்றும், வேலை விஷயமாக ஒருவரை அறிமுகப்படுத்தி வைக்க உள்ளதால், சுந்தராபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தித்து பேசலாம் என்று கூறினார்.  

இதை நம்பிய அந்த இளம்பெண்ணும் சரவணன் கூறியபடி கடந்த மாதம் 26-ந் தேதி அந்த ஓட்டலுக்கு சென்றார். அங்கு உள்ள அறையில் சரவணன் மட்டும் இருந்தார். அப்போது 2 பேரும் வேலை விசயமாக பேசிக்கொண்டு இருந்தனர். 

பாலியல் பலாத்காரம் 

அப்போது திடீரென்று சரவணன், அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ததுடன், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவேன் எனவும் மிரட்டியதாக தெரிகிறது. 

இது குறித்து அந்த பெண் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். இது பாலியல் தொடர்பான வழக்கு என்பதால் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. 

வலைவீச்சு 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் சரவணன்வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் சரவணன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். 


Next Story