ஆடி அமாவாசையையொட்டி கடலூர் சில்வர் பீச், ஆறுகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தடை


ஆடி அமாவாசையையொட்டி கடலூர் சில்வர் பீச், ஆறுகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தடை
x
தினத்தந்தி 8 Aug 2021 10:58 PM IST (Updated: 8 Aug 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

ஆடி அமாவாசையையொட்டி கடலூர் சில்வர் பீச், ஆறுகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கடலூர், 

ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் ஆசீர்வாதம் உடனடியாக கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.

 இதற்காக ஆடி அமாவாசை அன்று பொதுமக்கள் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கடற்கரை, நீர் நிலைகளுக்கு சென்று நீராடி, பின்னர் இறந்த தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கடற்கரை, நீர் நிலைகளுக்கு செல்ல அரசு தடை விதித்துள்ளது. மேலும் கோவில்களை திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆடி அமாவாசயைான நேற்று பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கடலூர் சில்வர் பீச், கெடிலம், தென்பெண்ணையாறு போன்ற நீர் நிலைகளுக்கு செல்ல முற்பட்டனர்.

வீடுகளில் தர்ப்பணம்

அவர்களை, அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். தேவனாம்பட்டினம் கிராமத்துக்கு சென்றவர்களை போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே செல்ல அனுமதித்தனர். 

கடலூர் பாடலீஸ்வரர் கோவில் சிவகங்கை குளத்திலும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே நீர் நிலைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததை அறிந்த பொதுமக்கள் பெரும்பாலானோர் தங்கள் வீடு களிலேயே முன்னோர்களுக்கு புரோகிதர் மூலம் தர்ப்பணம் கொடுத்தனர். இதில் எள், தண்ணீர், அரிசி, வாழைக்காய், பூ உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை பயன்படுத்தி தர்ப்பணம் கொடுத்தனர். இதையொட்டி கடலூர் சில்வர் பீச், வண்ணாரப்பாளையம், தென்பெண்ணையாறு, ஆல்பேட்டை சோதனைச்சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

 இதனால் ஆடி அமாவாசை அன்று மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் கடலூர் சில்வர் பீச், தென் பெண்ணையாறு ஆகிய இடங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

சிதம்பரம் 

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் ஆடி மாத அமாவாசையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் ஆடி அமாவாசையான நேற்று அங்கு, பொதுமக்கள் வந்து மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சென்றனர். ஆனால், குறைந்த அளவிலே தர்ப்பணம் கொடுக்க மக்கள் வருகை தந்திருந்தனர்.

Next Story