தினமும் 800 பேருக்கு கொரோனா பரிசோதனை
கூடலூர், பந்தலூர் பகுதியில் தினமும் 800 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கேரள எல்லையில் உள்ளதால், அங்கு கண்காணிப்பு தீவிரமாகிறது.
கூடலூர்,
கூடலூர், பந்தலூர் பகுதியில் தினமும் 800 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கேரள எல்லையில் உள்ளதால், அங்கு கண்காணிப்பு தீவிரமாகிறது.
கண்காணிப்பு பணி
கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் கேரள எல்லையில் உள்ள நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள கேரளா மற்றும் கர்நாடக எல்லைகளில் சுகாதாரத்துறையினர், போலீசார் கடந்த 4-ந் தேதி முதல் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர். என்ற கொரோனா பரிசோதனை சான்றிதழ், இ-பாஸ், தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இதை முறையாக பரிசோதித்து நீலகிரி போலீசார் அனுமதித்து வருகின்றனர்.
கொரோனா பரிசோதனை
இந்த நிலையில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் கேரளாவில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்று திரும்புகின்றனர். இதனால் கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு சென்று உடனடியாக திரும்பும் நீலகிரி பொதுமக்களுக்கு மாநில எல்லைகளில் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.
மேலும் அவர்களின் பெயர் விவரங்கள், முகவரியை பதிவு செய்து வருகின்றனர். கூடலூர் பகுதியில் உள்ள 7 சோதனைச்சாவடிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அறிகுறிகள் தென்பட்டால்...
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:- கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் 7 இடங்களில் கேரளா-கர்நாடகா சோதனைச்சாவடிகள் உள்ளது. வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பும் நீலகிரி மக்களிடம் இருந்து மாநில எல்லைகளில் வைத்து உடனடியாக சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. மேலும் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
ஒரு நாளைக்கு சராசரியாக 800 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. எனவே அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டும். கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறையிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story