சொந்த காரை வாடகைக்கு இயக்கியதால் சிறைபிடிப்பு


சொந்த காரை வாடகைக்கு இயக்கியதால் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 8 Aug 2021 11:16 PM IST (Updated: 8 Aug 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் விதிமுறைகளை மீறி சொந்த காரை வாடகைக்கு இயக்கியதால் சுற்றுலா வாகன ஓட்டிகள் சிறைபிடித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கூடலூர்,

கூடலூரில் விதிமுறைகளை மீறி சொந்த காரை வாடகைக்கு இயக்கியதால் சுற்றுலா வாகன ஓட்டிகள் சிறைபிடித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

சுற்றுலா தலங்கள் மூடல்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.  
இதனால் சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். 

இதற்கிடையில் சொந்த வாகனங்களை விதிமுறைகளை மீறி சுற்றுலாவுக்காக இயக்குவதால் போதிய வருவாய் கிடைக்காமல், சுற்றுலா வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதையொட்டி விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கார் சிறைபிடிப்பு

இந்த நிலையில் கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் சுற்றுலா வாகன டிரைவர்கள் நேற்று முன்தினம் மாலை விதிமுறைகளை மீறி இயக்கிய ஒரு காரை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடிய காரில் பயணிகள் அழைத்து செல்லப்படுவதாக சுற்றுலா வாகன டிரைவர்கள் புகார் தெரிவித்தனர். 

பின்னர் போலீசாரிடம் அந்த காரை டிரைவர்கள் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் விதிமுறையை மீறி கார் இயக்கியது தெரியவந்தது. அந்த காரை போலீசார், கூடலூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

நடவடிக்கை

இதுகுறித்து சுற்றுலா வாகன டிரைவர்கள் கூறும்போது, போக்குவரத்து சட்டத்தின்படி உரிமம் புதுப்பித்தல், காப்பீடு என அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகிறது. 

ஆனால் எந்தவித தொகைகளும் செலுத்தாமல் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் சுற்றுலா தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story