நெற்பயிர்கள் அழிப்பு;தென்னை மரங்கள் வெட்டி அகற்றம்


நெற்பயிர்கள் அழிப்பு;தென்னை மரங்கள் வெட்டி அகற்றம்
x
தினத்தந்தி 8 Aug 2021 11:17 PM IST (Updated: 8 Aug 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம்- புதுச்சேரி வரை தேசிய நெடுஞ்சாலைக்காக நெற்பயிர்கள் அழிக்கப்பட்டதோடு, தென்னை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இந்த பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் இருந்து - புதுச்சேரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக ஜானகிபுரம், ஆனங்கூர், பில்லூர், நன்னாட்டம்பாளையம் மழவராயனூர், ஓட்டேரிப்பாளையம், கெங்கராம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக இந்த தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

முறையான பணம்

இதையொட்டி நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு முறையான பணத்தை விவசாயிகளுக்கும், நில உரிமையாளர்களுக்கும் வழங்கவில்லை என்று தெரிகிறது.
இருப்பினும் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக மழவராயனூர், ஓட்டேரிப்பாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள தென்னை மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது.

போராட்டம் 

இது பற்றி அறிந்ததும் அப்பகுதி விவசாயிகள் நேற்று முன்தினம் ஒன்று திரண்டு வந்து, மரம் வெட்டும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் போலீசார் பாதுகாப்புடன் விவசாயிகளின் நெற்பயிர்கள், தென்னை மரங்களை அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 
இது பற்றி அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய நிலத்திற்கு பணம் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் கையகப்படுத்திய நிலத்திற்கு குறைந்த அளவிலான மதிப்பீட்டு முறையில் பணம் வழங்கப்பட்டுள்ளது.

அழிப்பு

விவசாயிகளுக்கு எவ்வித முன்அறிவிப்பும் அதிகாரிகள் விடாமல், ஒப்பந்ததாரர்களை வைத்து விவசாய நிலத்தையும், விவசாய பயிர்களையும் அழித்து வருகிறார்கள். அறுவடைக்கு 1 மாதம் இருக்கும் நிலையில், நெற்பயிர்களையும், நெடுஞ்சாலை துறை அளவீட்டில் வராத 100-க்கணக்கான தென்னை மற்றும் பனை மரங்களையும் பொக்லைன் எந்திரத்தை கொண்டு அழித்து வருகிறார்கள்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மாறாக விவசாயிகளை கேவலமாக அதிகாரிகள் பேசி திருப்பி அனுப்பி வருகின்றனர். ஆகவே இதில் மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்கவும், நெற்பயிர்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story