சீல் வைக்கும் கலாசாரம் இருக்கக்கூடாது
சீல் வைக்கும் கலாசாரமே இருக்கக்கூடாது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.
திருவண்ணாமலை
தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு பரிசு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பேருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் டி.எம்.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மண்ணுலிங்கம், மாநில கூடுதல் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் தனகோட்டி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் சந்திரா ஆகியோர் கலந்துகொண்டு, குலுக்கல் மூலம் தோந்தெடுக்கப்பட்ட 40 பேருக்கு பரிசுகள் வழங்கி பேசினர்.
இதில் திருவண்ணாமலை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் வினோத்கண்ணா, கார்த்திகேயன், தாலுகா வியாபாரிகள் சங்க செயலாளர் சங்கர், பொருளாளர் ரத்தினவேல், துணைத்தலைவர் விஜயராகவன், துணைச்செயலாளர் உத்தம்சந்த் உள்பட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
சீல் வைக்கு கலாசாரம்
அதைத் தொடர்ந்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக தமிழகம் வரவேண்டும் என்றால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தினமும் 5 கடைகளுக்கு கட்டாயமாக ‘சீல்’ வைக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவு பிறப்பித்ததாக அதிகாரிகள் வியாபாரிகளை அச்சுறுத்தி கடைகளுக்கு ‘சீல்’ வைத்து இருக்கிறார்கள். இது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். எனவே இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரிகள் மீது கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘சீல்’ வைக்கும் கலாசாரமே இருக்கக்கூடாது.
உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சி, அறநிலையத்துறை கடைகளுக்கு வாடகை விகிதத்தை மாநில முழுவதும் ஒரே சீராக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2 நாட்களில் தமிழக முதல்- அமைச்சரை சந்தித்து முறையிட இருக்கிறோம். இந்த மாவட்டத்திலும் பல்வேறு இடர்பாடுகள் உள்ளது. நியாமான தீர்வு ஏற்படும் என்று நம்பிக்கையில் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story