தாசில்தாரிடம் வாக்குவாதம்; 20 பேர் மீது வழக்கு


தாசில்தாரிடம் வாக்குவாதம்; 20 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 Aug 2021 11:56 PM IST (Updated: 8 Aug 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே துணை சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி தாசில்தாரிடம் வாக்குவாதம் செய்த 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் கட்ட முடிவு செய்து வருவாய் துறையினர் நிலத்தை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். தாய் கிராமமான அணைக்கரைப்பட்டி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் கட்ட 5 சென்ட் நிலம் இல்லை. இதனால் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு வருவாய் துறை மூலம் கட்டிட பணிகள் நடைபெற பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிைலயில் அணைக்கரைப்பட்டியில் துணை சுகாதார நிலையம் அமைக்க கோரி கிராம மக்கள் தாலுகா அலுவலகம் சென்று தாசில்தாரிடம் முறையிட்டனர். அப்போது தாசில்தார், ஏற்கனவே பாரதிநகரில் துணை சுகாதார நிலையம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டு உள்ளது என்று கூறி இருக்கிறார். கிராம மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன் சிங்கம்புணரி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த செந்தில்வேல் (வயது50), மதன் (35), பிரகாஷ் (40) உள்பட 20 பேர் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.



Next Story