பள்ளிகொண்டா சுங்க சாவடியில் ரூ.4 லட்சம் குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்


பள்ளிகொண்டா சுங்க சாவடியில் ரூ.4 லட்சம்  குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 8 Aug 2021 11:59 PM IST (Updated: 8 Aug 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

ரூ.4 லட்சம் குட்கா, புகையிலை பொருட்களுடன் வந்த மினிலாரி பள்ளிகொண்டா சுங்க சாவடியில் சிக்கியது.

அணைக்கட்டு

குட்கா கடத்தல்

தமிழகத்தில் குட்கா, பான்ராக் போன்ற போதை பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலங்களிலிருந்து சட்ட விரோதமாக லாரி, மினி வேன்களில் வேலூர் வழியாக கடத்திச்செல்லப்படும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. 

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள்

இந்த நிலையில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் மணிவண்ணன் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் இரரு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது நள்ளிரவு 12 மணிக்கு ஒரு மினி லாரி சுங்கச்சாவடியில் வந்து நின்றது. லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணான பதில் தெரிவித்தார்.

இதனையடுத்து போலீசார் லாரியை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று சோதனை செய்தனர். சோதனையில் தார்பாய் போட்டு மூடியபடி 750 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். பின்னர் போலீசார் லாரியுடன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது

அதைத்தொடர்ந்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் கர்நாடக மாநிலம் பெங்களூரு லால்பாக் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் முனியப்பன் (35) என்பதும் உடன் வந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் (41) என்பதும், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சென்னைக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்களை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் முனிசாமி மற்றும் அவருடன் வந்த சந்திரசேகர் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Next Story