கொள்முதல் நிலையம் திறப்பதற்காக காத்திருக்கும் நெல்மணிகள்
தா.பழூர் பகுதியில் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகும் அவல நிலை உள்ளது.
தா.பழூர்:
குவியல், குவியலாக...
அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பாசன பகுதிகளான தா.பழூர், காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, தென்கச்சிபெருமாள்நத்தம், இடங்கண்ணி, சோழமாதேவி, கோடாலிகருப்பூர், உதயநத்தம், வேம்புகுடி ஆகிய பகுதிகளில் நவரை பட்டத்தில் நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கோடாலிகருப்பூர் மற்றும் காரைக்குறிச்சி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில், அப்பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை விவசாயிகள் குவியல், குவியலாக குவித்து வைத்து காத்திருக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இதுவரை நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கான ஆணை வெளியிடப்படவில்லை. ஆனாலும் விவசாயிகள் நிச்சயம் தங்கள் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.
உலர வைக்கும் பணி
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென பெய்த மழையின் காரணமாக குவியல், குவியலாக குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் மழையில் நனைந்து ஈரமாகி சேதமடைந்தது. கடுமையான உழைப்பினால் உருவாக்கப்பட்ட நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாவதை கண்டு, விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மழையில் நனைந்த நெல்மணிகளை தார்ப்பாய்களில் பரப்பி உலர வைக்கும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டனர். நன்கு தரமாக விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் வீணாவதற்குள் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் விவசாயிகளின் வேதனையை மாவட்ட நிர்வாகம் அலட்சியப்படுத்துவதாகவும், அவர்கள் குற்றம்சாட்டினர். எனவே விவசாயிகளின் உழைப்புக்கு மதிப்பு அளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் கோடாலிகருப்பூர், தா.பழூர், காரைக்குறிச்சி ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story