டிரைவர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய பா.ம.க. நிர்வாகி உள்பட 7 பேர் கைது
டிரைவர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய பா.ம.க. நிர்வாகி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீழப்பழுவூர்:
லாரிகளை மறித்து மிரட்டல்
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள இடையத்தான்குடி கிராமத்தை சுற்றி பல்வேறு சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து பல்வேறு சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு லாரிகள் மூலம் சுண்ணாம்புக் கற்கள் தினமும் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இடையத்தான்குடி கிராமத்தை சேர்ந்த சிலர், அந்த கிராமத்தின் வழியாக சுண்ணாம்புக்கற்கள் ஏற்றி வந்த லாரிகளை மறித்து, ‘எங்கள் கிராமம் வழியாக தினமும் சென்று வருவதால், பணம் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று கூறி மிரட்டி லாரிகள் மற்றும் டிரைவர்களை பிடித்து வைத்துள்ளனர்.
7 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் மேலாளருக்கு, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசாரிடம் டிராவல்ஸ் நிறுவனத்தினர் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கீழப்பழுவூர் போலீசார், அங்கிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள், இடையத்தான்குடி கிராமத்தை சேர்ந்தரும், அரியலூர் மேற்கு ஒன்றிய பா.ம.க. ெசயலாளருமான சங்கர்குரு(வயது 32), அதே கிராமத்தை ேசர்ந்த காமராசு (50), அறிவழகன் (33), திருமுருகன் (37), ஆறுமுகம் (32), மகேந்திரன் (28), தர்மராஜ் (33) என்பதும், அவர்கள் டிரைவர்களை மிரட்டி பணம் கேட்டதும் தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தப்பியோடிய சுதாகர், தனவேல் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story