சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை


சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 9 Aug 2021 1:22 AM IST (Updated: 9 Aug 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை பக்தர்கள் இன்றி நடந்தது.

வத்திராயிருப்பு, 
ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை பக்தர்கள் இன்றி நடந்தது. 
சுந்தரமகாலிங்கம் கோவில்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. தற்போது கொரோனா பரவலை தடுக்க கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 
இதையடுத்து சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தடையை மீறி பக்தர்கள் அதிக அளவில் கூடுவதை தடுக்கும் வகையில் தாணிப்பாறை விளக்கு, மகாராஜபுரம் விளக்கு, மாவுத்து விளக்கு, தாணிப்பாறை வனத்துறை கேட் ஆகிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
சிறப்பு பூஜை 
இதன் காரணமாக நேற்று காலை கோவில் வளாகம், தாணிப்பாறை வனத்துறை கேட் ஆகிய பகுதிகள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஆடி அமாவாசையையொட்டி காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமி காட்சியளித்தார். இந்தநிலையில் பக்தர்கள் தாணிப்பாறை விளக்கு பகுதியில் உள்ள ஆலமரத்தடி விநாயகர் கோவிலில் மொட்டை அடித்து தங்களது நேர்த்திக்கடனை ெசலுத்தினர். 
 சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்திருந்தனர். விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் உத்தரவின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story